தமிழகத்தில் 20 வகை சேவைக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் அரசு உடனடியாக இந்த முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தது முதல் பத்திரப்பதிவு கட்டணம் என்பது தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பத்திரப்பதிவு செய்யும் மக்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையின் 20 வகையான சேவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் என்பது உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தமிழக பத்திரப்பதிவு துறையில் வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் உள்பட 20 வகை சேவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் என்பது கிடுகிடுவென அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முத்திரைத்தாள் கட்டணம் மூலம் அரசுக்கு வருவாய் என்பது கிடைக்கும்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 என இருந்தது. தற்போது அந்த கட்டணம் தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் உறுதிமொழி ஆவணத்திற்கு ரூ.20 என இருந்த முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 வரை அதிகரித்துள்ளது. இப்படி 20 வகை சேவைக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழக அரசை கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
பத்திரப்பதிவு துறையின் 20 வகையான சேவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை விடியா திமுக அரசு உயர்த்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. சொத்து என்ற சாமானியனின் கனவை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருக்கவேண்டிய அரசே, முத்திரைத் தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டை போடுவது கடும் கண்டனத்திற்குரியது.
தனது நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் பொருளாதார பாரத்தை மக்களின் தலைகளில் ஏற்றும் ஸ்டாலினின் திமுக அரசு, உடனடியாக முத்திரைத் தாள் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.