வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் உயரிய, மரியாதைக்குரிய பிரதமர் பதவியின் கண்ணியத்தை நரேந்திர மோடி அழித்துவிட்டார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
“உண்மையே கடவுள்” என்று மகாத்மா காந்தி சொல்வார். முண்டக உபநிஷத்தில் உள்ள “சத்யமேவ ஜெயதே” என்பது நமது தேசிய முழக்கம். உண்மையை நிலைநாட்டும் இந்த லட்சியங்கள், இந்திய சுதந்திர இயக்கம், இந்தியாவின் மறுசீரமைப்பு மற்றும் பொது வாழ்க்கையின் லட்சியங்களாக மாறின. உண்மையே பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் நாட்டில், உயர்ந்த பதவியில் இருப்பவர் அசத்தியத்தை நாடக்கூடாது.
இந்திய தேசிய காங்கிரஸுக்கு எதிராக பிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு அப்பாற்பட்டவை. அடுத்த தேர்தலுக்காக காத்திருக்காமல், ஆட்சி அமைந்தவுடன் மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம் என எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில், பொதுப் பணம், உத்திரவாதங்கள் மூலம் தினமும் மக்களின் பாக்கெட்டுகளில் போடப்படுகிறது.
நாட்டு மக்கள் முன் தனது வார்த்தைகளுக்கு இனி எந்த மதிப்பும் இல்லை என்பதை பிரதமர் புரிந்து கொண்டுள்ளார். 100 நாள் திட்டம், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வாய்ப்புகள், 100 ஸ்மார்ட் நகரங்கள், கறுப்புப் பணத்தை மீட்பது, பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, டாலருக்கு நிகராக ரூபாயை கொண்டு வருவோம் என்றது, நல்ல நாட்களை கொண்டு வருவோம் என்றது… இவையெல்லாம் பொய்யாகிவிட்ட வாக்குறுதிகள் என்று நாடு முழுவதும் இப்போது குற்றம் சாட்டப்படுகிறது. பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை.
140 கோடி இந்தியர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் உயரிய மற்றும் மரியாதைக்குரிய பதவியின் கண்ணியத்தை பிரதமர் அழித்துள்ளார். அவர் காங்கிரஸைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மாறாக, சத்தியத்தின் உதவியுடன் தனது பதவியின் கண்ணியத்தை மீட்டெடுக்க அவர் பாடுபட வேண்டும். இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.