துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் வகிக்கும் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தங்களது கட்சி சார்பில் பேசட்டும் எனவும், துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் உதயநிதி ஸ்டாலின் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் லோகோவை சென்னையில் வெளியிட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். திராவிட ஆரிய இனவாதம் ஆங்கிலேய கிறிஸ்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட கட்டுக்கதை என்பது நிரூபணம் ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை இனவெறிக்கு தூண்டும் வகையில், இன பேதத்தைத் கல்விக்கூடங்களில் ஏற்படுத்தி மாணவர்களிடையே இனப் பிரிவினையை உண்டாக்கிடும் வகையில் பேசியுள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி வகிக்க தகுதியற்றவர்.
அந்நிகழ்ச்சியில் பேசும்போது கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சங்கிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றும், அவர்கள் கல்வியை காவிமயமாக்க முயற்சிக்கிறார்கள் என்றும் ஒரு அப்பட்டமான பிரிவினைவாத புரட்டுக் கருத்துக்களை கூறியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. உதயநிதி அவர்கள் துணை முதல்வராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் எடுக்கும் போது தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கும் துணை முதல்வராக பதவியேற்றாரே தவிர அவரின் கட்சி நிலைப்பாடான திராவிட கருத்தியல்கள் கொண்ட இயக்கத்தினர்களுக்கு மட்டுமே துணை முதல்வராக பதவி ஏற்க வில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவர் துவக்கி வைத்த திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த சில நபர்கள் நக்சல் சிந்தனை கொண்டவர்கள் என்றும், பல்வேறு வழக்குகளில் உள்ளவர்கள் என்றும், ஆசிரியர்களாக பொறுப்பு வகிக்க தகுதி இல்லாதவர்கள் என்றும் அரசாங்கத்தால் பலமுறை தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களைக் காப்பாற்ற திராவிட கருத்தியல் என்ற அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் ஆளும் கட்சியான திமுகவின் ஆதரவோடு அந்த வழக்குகளில் தப்பிக்க உதயநிதி துணைபோகிறார் என்று கூறப்படுகிறது.
தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோற்றுப்போன திராவிட கருத்தியல்களை இதுபோன்ற நபர்கள் மூலமாக மீண்டும் வலுக்கட்டாயமாக மாணவர்கள் மத்தியில் புகுத்துவது உள்நோக்கம் கொண்டது. தமிழகம் என்றுமே தேசியத்தின் தெய்வீகத்தின் பக்கம் தான் இருந்துள்ளது என்பது தமிழக மக்கள் தங்கள் செயல்களின் மூலமாக பல்வேறு தடவை நிரூபித்துள்ளனர். துணை முதலமைச்சராக இருந்து கொண்டு பொதுவெளியில் பேசும்போது. பல அறிஞர்களால் ஆதாரப்பூர்வமாக பொய் என்று நிரூபிக்கப்பட்ட ஆரிய திராவிட இனவாதத்தை ஆதரித்து பேசியது திட்டமிட்ட சதி. மேலும் அவர் பேசும்போது மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டு அனைவருக்கும் தொழில் தொடங்குவதற்கான விஸ்வகர்மா திட்டத்தை குலத்தொழில் என்று பொய் பிரச்சாரத்தை செய்துள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தொழில் முனைவோருக்கான விஸ்வகர்மா திட்டம் ஏதோ தாத்தா முதலமைச்சர் அப்பா முதலமைச்சர் மகன் துணை முதலமைச்சர் என்ற குலப் பதவி போன்றது அல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் அனைத்து தொழில்களும் வளர்ச்சி அடையும் நோக்கத்தோடு செய்யப்பட்ட திட்டம் என்பதை உதயநிதி நினைவில் கொள்ள வேண்டும். யார் தொழில் செய்தாலும் விஸ்வகர்மா திட்டத்தின் மூலமாக பயனடையலாம். தமிழகத்தில் தொழில் திறமையை வளரவிடாமல் திமுக அரசுதான் முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது. அரசியலை குலத்தொழிலாக செய்யும் திமுகவினர் தான் பிற்போக்கு வாதிகள் என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எப்போதெல்லாம் தமிழக அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியிலும், வெறுப்பிலும் உள்ளனரோ அப்போதெல்லாம் தமிழர்களை ஏமாற்ற திமுக கையில் எடுப்பதுதான் திராவிட கருத்தியல், குலத்தொழில், ஆரிய திராவிட இனவாதம், இந்தி எதிர்ப்பு, மொழி வெறி அரசியல் என்பதை தமிழக மக்கள் தற்போது நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
இனியும் இவற்றையெல்லாம் பேசி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதை தமிழக துணை முதல்வர் உதயநிதி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசாங்கத்தின் துணை முதல்வராக இருந்து கொண்டு தங்களின் இயக்க கருத்துக்கு மாற்றானவர்களை சகித்துக் கொள்ள இயலாமல் பொதுவெளியில் பொய்யான கருத்தினை கூறி, அநாகரிகமாக பேசி தாக்குவது இவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஆகவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் வகிக்கும் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தங்களது கட்சி சார்பில் பேசட்டும். மக்கள் அப்போது இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.