சுங்கச்சாவடிகளை அகற்ற தேசிய அளவில் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: திமுக எம்பி வில்சன்!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி ரூ.28.54 கோடிக்கு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் 60 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்ட திமுக எம்பி வில்சனின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். மத்திய அமைச்சர் சொன்ன இந்த பதிலால் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற தேசிய அளவில் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டுகள் உள்ளன. கார், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் டோல்கேட்டில் பணம் செலுத்தி செல்கின்றன. இந்த கட்டணம் என்பது நெடுஞ்சாலை பராமரிப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 64 டோல்கேட்டுகள் உள்ளன. இதில் பல டோல்கேட்டுகளில் விதிகளை மீறி பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பணம் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் திமுக எம்பி வில்சன் கேட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் இணை அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா பதிலளித்துள்ளார். இதுபற்றி திமுக எம்பி வில்சன் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் நான் ஒரு கவன ஈர்ப்பு வினா எழுப்பி இருந்தேன். அந்த வினாவில் இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் டோல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். டோல் கேட்டுகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தேன். உதாரணமாக சென்னையில் பரனூர் டோல்கேட்டில் கிட்டத்தட்ட முதலீட்டுக்கு மேல் ரூ.28.54 கோடிக்கு லாபம் ஈட்டி உள்ளனர். முதலீட்டை தாண்டி வசூல் செய்துவிட்டனர். அதனால் 2008 ம் ஆண்டு விதிகளின்படி 60 சதவீத தள்ளுபடி கொடுக்க வேண்டும். ஆனால் இன்னும் அந்த டோல் கேட்டில் இன்னும் 100 சதவீத சுங்கக்கட்டணம் வசூல் செய்கின்றனர்.

அதுதவிர கார்ப்பரேஷன் லிமிட்டுகளில் 10 கிலோமீட்டர் சுற்றளவில் 5 டோல்கேட்டுகள் உள்ளன. அதேபோல் 20 டோல்கேட்டுகள் 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ளது. 2008 விதியின் படி 60 கிலோமீட்டருக்குள் ஒரு டோல்கேட் இருக்கும்போது இன்னொரு டோல்கேட் இருக்க கூடாது என்று சுட்டிக்காட்டினேன். அந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா பதிலளித்துள்ளார். அவர் சொல்வது என்னவென்றால் 60 கிலோமீட்டருக்குள் இன்னொரு டோல்கேட்டை வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே நிதின் கட்கரி 60 கிலோமீட்டருக்குள் இன்னொரு டோல்பிளாசா இருந்தால் அகற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் உறுதி மொழியளித்துள்ளார். ஆனால் இந்த அமைச்சர் நிதின் கட்கரியை மீறி இன்னொரு டோல்கேட் அமைக்கலாம் என்று கூறியுள்ளார்.

அதேபோல் பரனூர் டோல்கேட்டில் ரூ.28.54 கோடி லாபம் ஈட்டியுள்ளீர்கள். அதற்கு 40 சதவீதம் அளவில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்கு அவர், ரூ.28.54 கோடி உள்பட வரக்கூடிய பணத்தை Consolidate Funds of India-ல் கட்டிவிட்டோம். இதுபோல் கூடுதல் பணம் வந்தால் கன்சாலிடேட் பண்ட்ஸ் ஆப் இந்தியாவில் கட்டலாம். நாங்கள் அதனை குறைக்க முடியாது என்று கூறியுள்ளார். இதில் ஒன்றை மட்டும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பரனூர் டோல்கேட்டில் மட்டும் ரூ.28.54 கோடி லாபம் எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அவர் கூறுவது சரியில்லை. ஏனென்றால் 2008 விதி 6ன்படி ஒருமுறை சாலை பராமரிப்புக்கான முதலீட்டு பணம் வசூல் செய்துவிட்டால் 60 சதவீதம் தள்ளுபடி கொடுத்து 40 சதவீதம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று உள்ளது. இதனை சுட்டிக்காட்டியும் கூட இந்த பதிலை அளித்துள்ளார்.

ஆகவே எனது எக்ஸ் பக்கத்தில் அந்த அமைச்சரை டேக் செய்து ‛‛நீங்கள் சொல்வது 2008 விதியின் படி தவறாகும். இந்த டோல் கட்டணத்தை பொறுத்தவரை முதலீட்டு செய்து அதற்கான பணத்தை மட்டுமே வசூல் செய்ய முடியும். இது ஒன்றும் வரி இல்லை” என்று சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளேன். அதேபோல் ‛‛நிதின் கட்கரி கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று.. 60 கிலோமீட்டருக்குள் இன்னொரு டோல்கேட் நிறுவுவது கூடாது என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதா?” என்று கேட்டுள்ளேன். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் தான் அதிகப்படியாக 64 டோல் கேட்டுகள் உள்ளன. இதில் 20 டோல்கேட்டுகள் 60 கிலோமீட்டருக்குள் உள்ளது. இந்த அநியாயங்களை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியும் மத்திய அமைச்சர் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் நியாயமற்ற சுங்கச்சாவடி கட்டணங்களை எதிர்க்கவும், நாடு முழுவதம் சுங்கச்சாவடிகளை அகற்றவும் தேசிய அளவில் கட்சிகள் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.