ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் வரும் 14 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை பென் டிரைவ் மூலமாக பெற 27 பேரும் மறுத்த நிலையில் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை சென்னை பெரம்பூரில் ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. உணவு டெலிவரி செய்வது போல் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள், தான் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு அருகே நின்றிருந்த ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டிக் கொன்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி என அடுத்தடுத்து காவல்துறையின் கைது நடவடிக்கையில் பெரும் கும்பல் சிக்கியது. அடுத்தடுத்த விசாரணையில் திமுக வழக்கறிஞர் அருள், திமுக நிர்வாகி குமரேசனின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகிகள் மலர்கொடி, ஹரிதரன், காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன், பாஜக நிர்வாகி செல்வராஜ் என பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிக்கினர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை பிரபல ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியும் காதலியான பாஜக நிர்வாகியான பெண் தாதா அஞ்சலை என கைது படலம் நீண்டது. வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், அப்பு, நூர் விஜய், ராஜேஷ், கோபி, குமரன், புதூர் அப்பு என 28 பேரை கைது செய்தது காவல்துறை. இவர்களில் திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருவேங்கடம், அங்கு போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

ஆற்காடு சுரேஷின் நண்பரான சீசிங் ராஜாவை சுமார் இரண்டு மாதங்களாக தேடி வந்த காவல்துறையினர், அண்மையில் ஆந்திராவில் கைது செய்து அவரை விசாரணைக்காக வேளச்சேரி காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாம் சரவணன், சம்போ செந்தில் என்ற சம்பவம் செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது காவல்துறை. 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 28 பேரோடு, சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்த்து 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை வழங்குவதற்காக 28 பேர் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்காக சிறையில் இருந்து 25 நபர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் அவரை அழைத்து வரவில்லை.

குற்றப்பத்திரிக்கையின் நகலை பென்டிரைவ் மூலமாக குற்றவாளிகளிடம் கொடுத்தபோது அவர்கள் வாங்க மறுத்தனர். குற்றப்பத்திரிகை நகலை காகிதங்களில் வழங்க வேண்டும், பென்டிரைவ் மூலம் வேண்டாம் என குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, சிறைக்குள் பென்டிரைவ் அனுமதிக்கப்படவில்லை எனவும் இதனால் குற்றப்பத்திரிக்கையில் உள்ள தகவல்களை அவர்களால் படிக்க முடியாது எனவும் காகிதத்தில் குற்றப்பத்திரிகை நகல் கொடுத்தால் படிக்க ஏதுவாக இருக்கும் எனவும் குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். பி.என்.எஸ் சட்டப்பிரிவின்படி பென் டிரைவ் மூலம் குற்றப்பத்திரிகை நகலை வழங்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், குற்றவாளிகள் தரப்பு குற்றப்பத்திரிகை நகலை பெறாததால் வழக்கு விசாரணையை நவம்பர் 4 ஆம் தேதிக்கு அதாவது இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரின் நீதிமன்றக் காவலை நவம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை 27 பேரும் பெற மறுத்த நிலையில் நீதிமன்றக் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.