மதுரையில் தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதோடு, அவர்களது கண்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் வழக்கம் போல பெரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும் இனிப்புகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கியும் மக்கள் தீபாவளி பண்டிகையை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தொடர்ந்து வான வேடிக்கைகள், சரவெடிகள் உள்ளிட்ட வெடிகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரவு நேரங்களில் இரவை பகலாக்குவது போல வான வேடிக்கைகளால் தமிழகம் முழுவதும் ஜொலித்தது. இந்த நிலையில் சிலர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியும் உரிய நடைமுறைகளை பின்பற்றாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு விபத்துக்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட சிறுசிறு பட்டாசு விபத்துகளில் 304 பேர் காயம் அடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தது. தீபாவளி அன்று மட்டும் தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடமிருந்து 128 அழைப்புகள் வந்திருக்கிறது. அதில் பட்டாசு விபத்து காரணமாக தீப்பிடித்தது என 97 அழைப்புகள் வந்திருக்கிறது. பட்டாசுகள் இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்துகள் நடந்து இருக்கிறது. மேலும் பிற விபத்துகளில் மொத்தம் 544 பேர் காயமடைந்து இருக்கின்றனர்.
இந்நிலையில் மதுரையில் தீபாவளி பட்டாசு வெடித்து நான்கு குழந்தைகளுக்கு பார்வை பறிபோனதோடு, அவர்களது கண்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில்,”வெடி விபத்து பற்றிய விழிப்புணர்வு பல வகைகளில், பலரால் கொடுக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் விபத்துகள் தொடர்கிறது. தீபாவளி அன்று வெடி விபத்துகளால் கண்கள் பாதிக்கப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் எண்ணிக்கை 104. அவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் கரு விழியில் பாதிப்பு (Corneal Tear) ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் நான்கு பேருக்கு, முற்றிலும் கண் பார்வை பாதிக்கப்பட்டு, கண்கள் எடுக்கப்பட்டது (Enucleation). அந்த நான்கு பேரும் குழந்தைகள் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் முன்னிலையில் அதிக கவனத்துடன் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடி, பார்வையிழப்பை தடுப்போம் என மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.
இந்த தகவல் மதுரையில் ஒரு மருத்துவமனையில் மட்டுமே நடந்தது என்பதை கவனிக்க வேண்டும். இது மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான கண் மருத்துவமனைகள் இருக்கும் நிலையில் இதே போன்று பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே வரும் காலங்களில் பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பெற்றோர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளை மிக அருகில் அழைத்துச் செல்வது, அவர்களை வெடிக்க அனுமதிப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும், புஸ்வானம் உள்ளிட்டவற்றை கொளுத்தும் போது கூட அவர்களுக்கு பாதுகாப்பு கண்ணாடி அணிவிப்பது அவசியம்.