தென்னிந்திய சினிமாவில் இருந்து இந்தி சினிமா துறைக்கு வருபவர்களுக்கு மொழி முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இந்தியை சரியாகப் பேசாவிட்டால் அங்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று நடிகை ரெஜினா காஸண்ட்ரா கூறியுள்ளார்.
நடிகை ரெஜினா காஸண்ட்ரா இப்போது ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் நடித்துள்ளார். இந்தி படங்களிலும் நடித்து வரும் அவர் பாலிவுட்டுக்கும் தென்னிந்திய திரைத்துறைக்குமான வித்தியாசம் பற்றிப் பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
தென்னிந்திய சினிமாவில் இருந்து இந்தி சினிமா துறைக்கு வருபவர்களுக்கு மொழி முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இந்தியை சரியாகப் பேசாவிட்டால் அங்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். அந்த விஷயத்தில் அவர்கள் மன்னிக்காதவர்கள். ஆனால் தென்னிந்திய சினிமாவில் மொழி தெரியாவிட்டாலும் வாய்ப்பு கிடைக்கும். நான் இந்திப் படங்களில் நடிக்க விரும்பியபோது, மும்பையில் தங்கி வாய்ப்புத் தேட வேண்டும் என்று சொன்னார்கள்.
சில ‘நெட்வொர்க்’ கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்கள். தென்னிந்திய சினிமாவில் அப்படியில்லை. அங்கு ‘காஸ்டிங் ஏஜென்ட்’ என்ற விஷயமும் இல்லை. மானேஜர் அல்லது பி.ஆர்.ஓ-க்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள். இப்போது திறன் மேலாண்மை முகமைகள் தென்னிந்திய சினிமாவுக்குள் ஊடுருவியுள்ளன.
இந்தி சினிமாவில் போட்டி அதிகம். வேலைக்காக நான் என்னை விற்கக் கூடிய நபர் இல்லை. வாய்ப்புக்காக லாபி செய்யவில்லை என்றால் அது கிடைக்காது என்பதையும் அறிவேன். மற்ற நடிகைகளைப் போல வாய்ப்புகளைப் பெறுவதில் நான் ஆக்ரோஷமாக இல்லை என்றும் பலர் கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அனைத்தும் இயல்பாகவே நடக்க வேண்டும். இப்போது பாலிவுட்டில் எனக்காக பேச ஒரு குழு இருக்கிறது. நான் ஆடிஷனில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு ரெஜினா தெரிவித்துள்ளார்.