தோல்விகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்: சமந்தா!

தனது சமீபத்திய படங்கள் சரிவர வரவேற்பை பெறாத நிலையில், இது தொடர்பாக மனம் திறந்துள்ள நடிகை சமந்தா, “தோல்விகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு விவாகரத்து பெற்றுவிட்டார்கள். நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சமந்தா பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் கமிட்டான படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வரலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Ask me anything’ என பதிவிட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், சமீபத்திய திரைப்படங்களின் தோல்விகள் குறித்து பேசிய அவர், “நான் கடந்த காலங்களில் தவறு செய்துள்ளேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். சில விஷயங்கள் சரியாக அமையவில்லை. அதனால் நான் தோல்விகளை ஒப்புக் கொள்கிறேன். சமீபத்திய சில படங்களில் நான் என்னுடைய பெஸ்டை கொடுக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். நான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திலும் சிறப்பாக செயல்படுவேன் என்று ஒவ்வொரு முறை நானே எனக்குள் சொல்லிக் கொள்வேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் முந்தைய கதாபாத்திரங்களை விட சவால் நிறைந்ததாக இருக்கும்” என்றார்.

அடுத்து வெளியாக உள்ள ‘சிட்டாடல் ஹனி பனி’ வெப் சீரிஸ் குறித்து பகிர்ந்து கொண்ட அவர், “ரிலீஸுக்கு முன்பே நான் பெருமைப்பட கூடிய ஒரு விஷயம் தான் இந்த வெப்சீரிஸ். என்னுடைய திரைப்பயணத்திலேயே மிகவும் சிக்கலான சவாலான கதாபாத்திரமாக இது அமைந்தது. நீங்களே பார்த்து தெரிந்து கொள்வீர்கள்” என தெரிவித்துள்ளார். இந்த இணையத் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நவ.7-ம் தேதி வெளியாகிறது.