இபிஎஸ், ஓபிஎஸ். உடன் பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

அதிமுக.,வில் ஒற்றை தலைமை பிரச்னையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசினர்.

அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னையில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இன்று நடந்த அதிமுக பொதுக்குழு நடந்தது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தாக்கல் செய்த 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. வரும் ஜூலை11ம் தேதி மீண்டும் ஒற்றை தலைமை தீர்மானத்துடன் பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டம் சட்டவிரோதமாக நடந்துள்ளதாக கூறி பொதுக்குழுவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். இதனால் அக்கட்சியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில், பழனிசாமியையும், பன்னீர்செல்வத்தையும் தமிழக பா.ஜ., தலைவர் மற்றும் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் சந்தித்து பேசினர். முதலில், பழனிசாமியை அவரது இல்லத்திலும், பின்னர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திலும் சந்தித்தனர். ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு கேட்டு சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அக்கட்சியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பா.ஜ., நிர்வாகிகள் தனித்தனியே சந்தித்து பேசியது பல யூகங்களை கிளப்பி உள்ளது.

இதனிடையே இந்த சந்திப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டு தான் இந்த சந்திப்பு நடந்தது. அதிமுக.,வின் உட்கட்சி பிரச்னையில் பா.ஜ., தலையிட்டது கிடையாது. ஜனாதிபதி தேர்தல குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்றார்.