வன்னியர் சங்கத் தலைவரை மிரட்டியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என மிரட்டும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்க்காமல் உடனே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மிரட்டியுள்ளனர். கடலூர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லத்துரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. செல்லத்துரை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டிய காவல்துறை, அவர்கள் மீது மிகவும் சாதாரணமான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பாதுகாக்க முயல்கிறது. மேலும், புவனகிரியில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டி வன்னிய மக்களையும் இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளனர். வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டி எடுப்போம் என்று விசிகவினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் ஏதேனும் பகுதியில் ஆளும்கட்சிக்கு எதிராக எவரேனும் மேடை போட்டு பேசினால், அந்த கூட்டத்தின் ஒலி வாங்கியை அணைப்பது, மின்சாரத்தை துண்டிப்பது, கூட்ட ஏற்பாட்டாளர்களை கைது செய்வது உள்ளிட்ட அனைத்து சாகசங்களையும் செய்யும் காவல்துறை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் மிரட்டல்கள், வெறுப்புப் பேச்சுகள், கொலை மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்தையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, கொலை மிரட்டல் மற்றும் வெறுப்புப் பேச்சுகளுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவரது அலுவலகத்தில் வைத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு நடத்தியுள்ளார். கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளை, ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாக இருந்தால், அலுவலகத்திற்கு அழைத்து உபசரிப்பது தான் திராவிட மாடல் காவல்துறையின் கொள்கையா?

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு 952 நாட்கள் ஆகியும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் வன்னியர்களை வஞ்சிக்கும் திராவிட மாடல் அரசு, வன்னியர்கள் மீதான தாக்குதல்களையும் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. வன்னியர்களும், பட்டியலினத்தவரும் அடித்துக் கொண்டால் தான் தங்களின் பிழைப்பு நடக்கும் என்று என்பதால் காவல்துறையின் கைகளை ஆளுங்கட்சி கட்டி வைத்திருக்கிறது.

மஞ்சக்கொல்லை செல்லத்துரையை கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம்; வன்னியர்கள் இன்னும் 42 ஆண்டுகளுக்கு எங்களிடம் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில் கைது செய்வது மட்டுமின்றி, பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை தடைகள் போடப்பட்டாலும் அவற்றை மீறி தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை பாமக முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.