பாலிவுட் கான்களில் ஒருவரான சல்மான் கானுக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சில கைதும் செய்யப்பட்டனர். தற்போது மற்றொரு கான் நடிகரான ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசுக்கே வந்த கொலை மிரட்டல் போன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானைக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக எச்சரித்து, போலீஸ் லேண்ட்லைன் எண்ணுக்கு மிரட்டல் வந்ததை அடுத்து, அடையாளம் தெரியாத நபர் மீது மும்பையில் உள்ள பாந்த்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஐபிசி பிரிவு 308 (4) மற்றும் 351 (3)(4) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் தொடர்பாக சைபர் காவல் நிலையத்துடன் இணைந்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் பாலிவுட் டாப் நடிகரான சல்மான் கானுக்கு இதே போன்ற மிரட்டல்கள் வந்ததை தொடர்ந்து, தற்போது ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. போனில் அழைத்து மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்து நடிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை பந்த்ரா காவல் நிலையத்துக்கு வந்த அழைப்பில், ரூ. 50 லட்சம் தராவிட்டால் ஷாருக்கானை கொலை செய்வதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டபோதிலும், கைது நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை. இந்த மிரட்டல் அழைப்பு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வந்திருப்பதாக மும்பை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து போலீஸ் குழு ராய்ப்பூருக்கு விசாரணைக்காக விரைந்துள்ளது.