அரசியல் அதிகாரத்தில் ஒன்று ஆளும் கட்சியாக இருக்கவேண்டும். இல்லை எனில் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும். இதில் தோழமைக் கட்சியாக இருப்பதில் ஒரு பலனும் இல்லை என்று சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்தாலும் அதைப் பற்றி எல்லாம் பெரிய அளவில் கவலைப்படாமல் வெளிப்படையாகக் கருத்துச் சொல்பவர் கார்த்தி சிதம்பரம். அவர் சில மாதங்கள் முன்னதாக ஆட்சியில் பங்கு பற்றிப் பேசி இருந்தார். அதே போல் காங்கிரஸ் கட்சியிலிருந்தாலும் அக்கட்சியின் தேசிய தலைமையின் முடிவுக்கு எதிராக சில கருத்துகளையும் அவர் முன்வைத்து வந்துள்ளார். திருமாவளவன் ஆட்சியில் பங்கு எனப் பேச தொடங்கி இருக்கும் நேரத்தில் அவரது கருத்து வரவேற்றுப் பேசி இருக்கிறார் இவர். மேலும் தமிழ்நாட்டில் புதிய கட்சியாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் பற்றியும் விஜய் அரசியல் எதிர்காலம் பற்றியும் பல விசயங்களைப் பேசி இருக்கிறார்.
கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது:-
திருமாவளவனின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஒரு கட்சியின் தலைமையின் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறோம். பெரும்பான்மை கிடைத்த பின் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளைத் தோழமை கட்சிகளாகவே கருதும் போக்கே இருந்து வருகிறது. அந்த நிலை மாற வேண்டும். அரசியல் அதிகாரத்தில் ஒன்று ஆளும் கட்சியாக இருக்கவேண்டும். இல்லை எனில் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும். இதில் தோழமைக் கட்சியாக இருப்பதில் ஒரு பலனும் இல்லை. என் அரசியல் அனுபவத்தில் தனித்து ஒரு கட்சி ஆட்சியமைப்பதைவிடக் கூட்டணி ஆட்சிதான் ஜனநாயகத்தில் சிறந்ததாக விளங்கும்.
இன்றைக்கு இந்தியாவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லை. கட்சிக்குள் அது குறித்து விவாதமே நடப்பதில்லை. இதனால் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்கும் போது குறைந்த பட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்க முடியும். அதனால் மக்கள் நல்ல ஆட்சியின் பலனை அனுபவிக்க முடியும். இப்போது ஆந்திராவை எடுத்துக்கொள்ளுங்கள். தெங்கு தேசம் தலைமையில் கூட்டணி வைத்து வெற்றி பெற்றனர். தெலுங்கு தேசம் தனிப் பெரும்பான்மையில் இடங்களைக் கைப்பற்றியது. அப்படி இருந்தும் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் பவன் கல்யாணுக்கும் பாஜகவுக்கும் இடமளித்துள்ளது. எனவே பெரும்பான்மை கிடைத்தவிட்டது என்பதால் கூட்டணிக் கட்சிகளை அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது என்பது சரியான வாதம் அல்ல. நானே கடந்த ஜூன் மாதமே இதைப் பற்றிப் பேசினேன். எனவே திருமாவளவன் நல்ல கருத்தைத்தான் தெரிவித்து இருக்கிறார். அதே நேரம் காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் தேர்தலைச் சந்தித்து தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு ஒரு கூச்சமும் கிடையாது. அதற்காக இந்தக் கோரிக்கை வைக்கவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் கட்சியாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
விஜய்யிடம் ஒரு இளம் சக்திக்கான ஈர்ப்பு இருக்கிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதை ஒரு அமைப்பாக வளர்த்து உருவம் கொடுக்க முடியுமா என்பதை என்னால் இப்போது கணிக்க முடியவில்லை. மு.கருணாநிதி 5 முறை முதல்வரானது சாதனை அல்ல. அவர் ஆட்சியில் இல்லாத போதும் கட்சியைக் கட்டி காப்பாற்றினார். அதுதான் சாதனை. எனவே விஜய் அவரது கட்சியின் பலத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். அது பெரிய சவால். அடுத்து இன்றைக்கு உள்ள இளைஞர்கள் பலர் காலங்காலமாக இருக்கும் கட்சி மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். புதிய கட்சியை அவர்கள் விரும்புகின்றனர். எப்போதுமே புதிய கட்சி வராதா எனக் காத்துக் கொண்டுள்ள ஒரு பகுதி வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விஜய் பக்கம் போவார்கள்.
ஒரு காலத்தில் வைகோ இருப்பார் என நினைத்தார்கள். அடுத்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நம்பினார்கள். மறுபடியும் விஜயகாந்த்தை நம்பினார்கள். இப்போது விஜய் வந்துள்ளார். ஆனால், இன்றைக்கு உள்ள நிலையில் அதிமுக, திமுகவை தவிர்த்துவிட்டு ஒரு கட்சி ஆட்சியை அமைக்கவே முடியாது. அதுவே என் கணிப்பு. விஜய் வருகையால் திமுக, அதிமுகவுக்குப் பாதிப்பு இருக்காது. நேரடியாக விஜய் கட்சி சீமானைத்தான் பாதிக்கும். ஏனென்றால் அவருக்கு என்று நிரந்தர வாக்கு வங்கி இல்லை. அடுத்து தேமுதிக பாதிக்கப்படும். அடுத்து பாஜக என்ற கட்சியை தாண்டி அண்ணாமலை அதிரடியாகப் பேசுவதால் ஒரு கூட்டம் அவர் பின்னால் இருந்தது. அதுவும் இனி விஜய் வருகையால் உடையக்கூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.