மதுரையை தார்ப்பாய் போட்டா மூட முடியும்?: செல்லூர் ராஜு!

மதுரையில் தனது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு மேற்கொண்டார் முன்னாள் அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜு. அப்போது, பணிகள் தாமதமாக மழை தான் காரணம் என அதிகாரிகள் கூற கோபமடைந்த அவர், மழை பெய்ய தான் செய்யும்.. அதுக்கு மதுரையை தார்ப்பாய் போட்டா மூட முடியும்?.. என அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த அக்டோபர் மாதம் ஆறு நாட்களாக காலை மாலை என இரண்டு நேரங்களிலும் அதிகப்படியான மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து வெள்ள காடாக காட்சியளித்தது. பல இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகள், கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மேலும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பகுதியான செல்லூரிலும் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.

இந்நிலையில் மழை முடிந்திருக்கும் நிலையில், மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார். அப்போது,” ஏற்கனவே மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்காங்க.. நீங்க வேற இப்படி லேட்டா வேலை பார்த்தா எப்படி?” என அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு பணிகள் தாமதமாக மழை தான் காரணம் என அதிகாரிகள் கூறினர். இதனால் கோபமடைந்த அவர், மழை பெய்ய தான் செய்யும்.. அதுக்கு மதுரையை தார்ப்பாய் போட்டா மூட முடியும்?.. என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

அதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திமுக அரசு மதுரையை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. செல்லூர் பகுதியில் சுணக்கமாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளால் குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பின்னர் கால்வாய்களை தூர்வாரும் மாநகராட்சி ஏன் அதை மழை காலத்திற்கு முன்பே மேற்கொள்ளாதது ஏன்?” என்றார்.

திமுக எனும் ஆலமரத்தை வெட்ட சிலர் பிளேடுடன் வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, “ஆலமரமே பிடுங்கிக் கொண்டு போயிருக்கு வெள்ளத்தில். உலகமே அழிந்திருக்கிறது. ஆலமரம் அழியாதா? உதயநிதிக்கு தெரியவில்லை. என்ன தான் கூட்டணி பலமாக இருந்தாலும், மக்கள் பலம் இருந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்” என்றார்.

2026ல் கூட்டணி ஆட்சி அமையும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, “கூட்டணி ஆட்சி குறித்து இப்போது சொல்ல முடியாது. பாமக நாடாளுமன்ற தேர்தலில் 10 நாள் முன்பு வரை எங்களுடன் கூட்டணி என பேசிக் கொண்டிருந்தனர். பின், சட்டென்று கூட்டணி மாறி விட்டது. டாக்டர் இன்று பேசுகிறார். ஆனால், எப்ப வேண்டுமானாலும்.. கூட்டணி என்பது கொள்கை முடிவு அல்ல இது. தேர்தல் நேரத்தில் கூட்டணியை முடிவு செய்வோம்” என்றார்.