சமூக ஆர்வலர் என கூறும் கஸ்தூரி இப்படி வெறுப்பு பேச்சு பேசுவது ஏன் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இத்தனை அவதூறாக பேசிவிட்டு தனது பேச்சை கஸ்தூரி நியாயப்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு நவ.14ஆம் தேதி வழங்கப்படுகிறது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேசியதாக புகாரின் பேரில் நடிகை கஸ்தூரியை விசாரணைக்கு அழைக்க போலீஸார் அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கு சம்மன் கொடுக்க சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கஸ்தூரி மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி தலைமறைவான நிலையில் இரு தனிப்படைகள் அமைத்து போலீஸார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை திருநகர், ஆண்டிப்பட்டி காவல் நிலையங்களில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கஸ்தூரி தரப்பில், “குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அரசிக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே சொல்லப்பட்டது. தெலுங்கு பேசும் பெண்களின் மதிப்பை குலைக்கும் வகையில் பேசவில்லை. புகாரில் மனுதாரரின் பேச்சு தவறாக காண்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் , “மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அண்டை மாநிலங்களுக்கிடையே பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேசியுள்ளார். தெலுங்கு பேசும் நட்பு மாநில திருப்பதி கோவிலுக்கு 40% தமிழ் பக்தர்கள் சென்று வரும் சூழலில், மனுதாரரின் பேச்சு சரியானது அல்ல. அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களின் சிந்தனை ஒன்றே. இது போன்ற சம்பவங்களை இப்படியே விட்டால், அது பிறரை ஊக்குவிப்பதைப் போல் அமைந்துவிடும். ஆகவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான், அவர்களை எப்படி பிரித்துப் பேச முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து கஸ்தூரி பேசிய வீடியோ நீதிபதி முன்பு ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி, கஸ்தூரிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். சமூக ஆர்வலர் என கூறும் கஸ்தூரி, இப்படி வெறுப்பு பேச்சை பேசியது ஏன், தனது செயலுக்கு கஸ்தூரி ஒரு இடத்தில் கூட மன்னிப்பு கேட்கவில்லையே ஏன்? மாறாக கஸ்தூரி பேசியதை நியாயப்படுத்துவது போல் உள்ளது என கண்டித்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் நவ.14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.