பாடத்திட்டத்தில் திராவிடம் மட்டும்தான் இருக்கு, சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி எதுவும் இல்லை: ஆளுநர் ரவி!

தமிழக பாடத் திட்டத்தில் திராவிடம் பற்றிதான் இருக்கிறது என்றும், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி எதுவும் இல்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு பதவி ஏற்றார். அது முதற்கொண்டு ஆளுநருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே பனிப் போர் நீடித்து வருகிறது. அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவதாகவும், இதனால் அரசின் செயல்பாடுகள் முடங்குவதாகவும் நேரடியாக குற்றம்சாட்டப்பட்டது. ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

அதே சமயம் திமுகவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாகவே தாக்கிப் பேசி வருகிறார். திராவிடம் தொடர்பாகவும், சமூக நீதி குறித்தும் கடுமையாக விமர்சனங்களை முன்வைப்பதோடு சனாதனத்தையும் உயர்த்தி பேசி வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் உடனுக்குடன் பதில் தரப்பட்டு வருகிறது. அண்மையில் கூட தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தை முன்வைத்து ஆளுநருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் பி.செந்தில்குமார் எழுதிய பாஞ்சாலங்குறிச்சி போர்கள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

தமிழ்நாடு பல்கலைக் கழக பாடங்களில் திராவிடம் குறித்த வரலாறுகள் தான் அதிகம் உள்ளன.
சுதந்திர போராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை. 19ஆம் நூற்றாண்டு மிகவும் சிறப்பானது என்றும், ஆங்கிலேயர்கள் சிறந்தவர்கள், இங்கு சமூக நீதியை கடைபிடித்தார்கள். நமக்கு நல்லது செய்தார்கள் என்றெல்லாம் புகழாரம் சூட்டும் வகையில் மாணவர்களுக்கு தற்போது தமிழ்நாட்டில் கற்பிக்கப்படுகிறது.

கல்லூரி பாட புத்தகங்களில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றிய பாடங்கள் இல்லை. நமது விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி சிந்திக்க மறந்து விட்டார்கள். வீரர்களின் வரலாற்றை மக்கள் நினைவில் இருந்து அழிக்க முயற்சிகள் நடக்கின்றன.

திருவள்ளுவர் மற்றும் ஷேக்ஸ்பியரை ஒப்பிட்டு சில அறிவாளிகள் புத்தகம் எழுதுவது எனக்கு வலிக்கிறது. திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பு வந்தவர்.. ஆனால், ஷேக்ஸ்பியர் யார்? இவ்வாறு அவர் பேசினார்.