தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு!

சென்னையில் அரசு மருத்துவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

சென்னையில் அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில், அவசரகால சிகிச்சை மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளிலும் அரசு மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும்.

சென்னையில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீப காலமாக மருத்துவர்கள் மீதான தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது. கடுமையான மருத்துவ சட்டங்களால் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது, ஆனால் மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் குறையவில்லை. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து தனியார் மருத்துவமனை மருத்துர்கள் சங்கத்திடம் பேசிவருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி. மருத்துவமனைக்கு வந்தவர் மருத்துவர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை குத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், ரத்தவெள்ளத்தில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய நபரை பிடித்தனர். பின்னர் சம்பவம் குறித்து கிண்டி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை வளாகத்துக்கு விரைந்து வந்த கிண்டி போலீஸார், பிடிபட்ட நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.