கூட்டணி தொடர்பாக அதிமுகவிடம் எந்த அப்ளிகேஷனும் போடவில்லை என பாஜகவின் எச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவும் பாஜகவும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நெருக்கமாக பயணித்து வந்தன. 2019 மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இதன் விளைவாக சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக சார்பில் 4 எம்எல்ஏக்கள் சட்டமன்றம் சென்றனர்.
எனினும், அண்ணாமலை மீது குற்றம்சாட்டி பாஜகவுடனான கூட்டணியை கடந்த ஆண்டு அதிமுக முறித்துக்கொண்டது. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலை அதிமுகவும் பாஜகவும் தனித் தனி அணிகள் அமைத்து சந்தித்தன. எனினும், இரண்டு கூட்டணிகளும் தோல்வியை சந்தித்தன.
இதனிடையே அண்மையில் திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2026 தேர்தலை சந்திப்போம் என்று இபிஎஸ் கூறினார். பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்ததால், அது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. ஆனால், பாஜகவுடன் 2026 தேர்தலில் கூட்டணி இல்லை என்று அறிவித்த இபிஎஸ், பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்கே அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கூறியதாவது:-
அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்ல நாங்கள் என்ன வரிசையில் நின்றுகொண்டா இருக்கிறோம். பிறகு எதற்காக எடப்பாடி பழனிசாமி எப்படி இதுபோன்ற கருத்தை தெரிவிக்க முடியும். ஆனால், ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அதிமுகவிடம் நாங்க ஒண்ணும் அப்ளிகேஷன் போடல.. என்ன உதாசீனம் படுத்துறாங்களா? நாங்க என்ன கெஞ்சிட்டா இருக்கோம். நாங்கள் எந்த கட்சியையும் எங்கள் கூட்டணிக்கு அழைக்கவில்லை. அதே சமயம் ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் இருந்த கட்சிகளுடன் கூட்டணி தொடர்கிறது.
கூட்டணி தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில் பாஜக மத்திய குழு எடுக்கும் முடிவை செயல்படுத்தும் இடத்தில் நான் இருக்கிறேன். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுடன் சேர்ந்து அதிமுக பெற்ற வாக்குகள் 1 கோடி. தேசிய ஜனநாயகக் கூட்டணி 80 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.