ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகதான் இருக்க வேண்டும்: சீமான்!

ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகதான் இருக்க வேண்டும். சர்வாதிகாரம் இல்லாமல் எந்த செயலையும் சரி செய்ய முடியாது என்று சீமான் கூறினார்.

நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. அப்போது, கருத்து தெரிவிக்க முயன்ற சில நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இது எனது கட்சி, எனது முடிவு, யாரும் கருத்து சொல்ல தேவையில்லை என சீமான் கூறி, கட்சி நிர்வாகிகளை கூட்டத்தில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேட்டியளித்த நெல்லை மாவட்ட நாதக இளைஞரணி செயலாளர் பர்வீன், “நான் 8 வருடங்களாக நாம் தமிழர் கட்சியில் இருக்கிறேன். 7 வருடங்களாக பொறுப்பில் இருந்து வருகிறேன். கட்சிக்காக எவ்வளவு உழைத்துள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும். அண்ணன் சீமான் பேசி முடித்ததும் கேள்வி எழுப்ப எழுந்தபோது, நீ யார் கட்சிக்கும், உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார். இருப்பது என்றால் இரு.. இல்லை என்றால் வெளியே போடா.. இது என் கட்சி என்று கூறினார்” என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் நேற்று இரவு அம்பாசமுத்திரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

ஒரு நேர்மையாளர், சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும். சர்வாதிகாரம் இல்லாமல் எந்த செயலையும் சரி செய்ய முடியாது. சர்வாதிகாரம் இல்லாத எந்த செயலும் நேர்மையாக இருக்காது. காமராஜர், நேரு போன்ற மிகச்சிறந்த ஆட்சியாளர்கள், அன்பான சர்வாதிகாரியாக தான் இருந்துள்ளார்கள். ஒரு ஆசிரியர் படிக்காத மாணவனுக்கு பாடம் மனதில் நிற்க வேண்டும் என 10 முறை வீட்டுப்பாடமாக எழுதிட்டு வா என்று சொல்வது மாணவன் பார்வையில் சர்வாதிகாரம். ஆனால், ஆசிரியர் பார்வையில் அது மாணவனின் நலனுக்கானது. எனது கையில் ஊசி மருந்து இருக்கிறது. அதை போட்டால் தான் குழந்தை பிழைக்கும். குழந்தைக்கு வலிக்கும் என ஊசியை போடாமல் விடுவதா?

கட்சி விதிகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் எவ்வளவு பெரிய கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் இடமில்லை. இது வெகுதூரப் பயணம். நான் சர்வாதியாக இருக்கிறேன் என்றால் போய்விடு. சர்வாதிகாரம் இல்லாத இடத்துக்கு போய்விடு. இது என் கட்சி பிரச்சனை.. நாட்டுப் பிரச்சனையா? மக்கள் பிரச்சனையா? இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

மது தொடர்பான வழக்கில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிமன்றம் சொல்கிறது; நீட் விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு என்றால் அதனை ஏற்க மறுத்து, தேர்வு எழுத சொல்கிறது; ஒரே நீதிமன்றம் தான் இரு வேறு தீர்ப்புகளை சொல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.