அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை திமுக அரசு அனுமதிக்கக் கூடாது: வானதி சீனிவாசன்!

அமரன் படம் வெளியான திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாக்கு வங்கி அரசியலுக்காக அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை திமுக அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய முகுந்த் வரதராஜன், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுடனான மோதலின் போது மரணமடைந்தார். அமரன் படம் மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ அதிகாரியின் பயோபிக்காக எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் வசூலைக் குவித்து வருகிறது. இந்தப் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் அமரன் படத்துக்கு எதிராக விமர்சனங்களும், போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்களின் மண் உரிமைப் போராட்டத்தை பற்றிய புரிதல் இல்லாமல், அவர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கண்டனங்களும் வலுத்து வருகின்றன. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பலத்த எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். எதிர்மறை விமர்சனங்களை கடந்தும் அமரன் படம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் இரண்டு வாரங்களில் மட்டுமே அந்தப் படம் இந்தியா முழுவதும் சுமார் ரூ.250 கோடி வசூலை கடந்துள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அமரன் படம் வெளியான திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை திமுக அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கூறியதாவது:-

‘அமரன்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள, திருநெல்வேலி மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்றுள்ளனர். இந்த திரையரங்கம் முன்பு கடந்த கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அலங்கார் திரையரங்கில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் போரில் வீர மரணம் அடைந்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாறுதான் அமரன் திரைப்படம். மக்களிடம் தேசபக்தியை விதைக்கும் இப்படத்திற்கு சில அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனாலும் வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக அரசு மவுனம் காப்பதால், பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இனியும் திமுக அரசும், காவல் துறையும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் நிலைமை விபரீதமாகிவிடும். சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதுதான் மாநில அரசின் முதல் கடமை. வாக்கு வங்கி அரசியலுக்காக, அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை அனுமதிக்கக் கூடாது.

பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யாத காவல்துறை, அதற்கு எதிராக வன்முறை கலாசாரத்திற்கு எதிராக குரல் கொடுத்த இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்வதுடன், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேசபக்தி திரைப்படத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அடிப்படைவாதிகள் செயல்படுவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.