தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ஜன.21-ம் தேதி நடைபெறவுள்ள கள் இறக்கும் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் வரும் ஜனவரி 21-ம் தேதி நடைபெறும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கிச் சந்தைப்படுத்தும் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவையும் அளிக்கும். அத்துடன் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வெல்லவும் துணைநிற்கும்.
தமிழர் வாழ்வியலின் ஒரு கூறாக விளங்கிய கள்ளுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து, கள் இறக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தொடர்ச்சியாகப் பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ்நாடு கள் இயக்கத்துக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கள் ஒரு போதைப்பொருள் அல்ல. கள்ளை, மரங்களில் இருந்து இறக்கி விற்பனை செய்ய பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் வரும் 2025 ஜன.21-ம் தேதி பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டத்தை தமிழ்நாடு கள் இயக்கம் மேற்கொள்ளும் என அதன் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீமான் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மக்களாட்சிக் கட்டமைப்பின் நான்காம் தூணாக விளங்கி, நாட்டின் குடிமக்களுக்கும், அரசுக்குமிடையே உறவுப்பாலமாகச் செயற்பட்டு, மக்களின் உளவிருப்பத்தையும், சமூகத்தின் ஆழ்மனக்குரலையும் எதிரொலிக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் பங்களிப்பைப் போற்றும் ஊடகவியலாளர்கள் நாள் இன்று!
ஊடகங்கள் என்பவை சமூகத்தின் பிரதிபலிப்பு; மக்களின் முகம் காட்டும் கண்ணாடி. அடித்தட்டு மக்களின் அவலங்களையும், சமகாலத்தில் நடந்தேறும் அநீதிகளையும், மக்களுக்கு நேரும் இன்னல்களையும், ஆதிக்கத்தினால் விளையும் கொடுமைகளையும், அதிகார வர்க்கம் செய்திடும் வன்முறைகளையும், சனநாயகத்துக்கெதிரான அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் என அரசதிகாரத்தின் அத்தனை முகங்களையும் துகிலுரித்து உலகுக்கறிவித்து, மக்களின் துயர்போக்கக் களப்பணியாற்றும் ஊடகங்கள் சனநாயகத்தைக் கட்டிக்காக்கும் பேரரண்களாகும். அந்தப் பெரும்பணியைச் செய்கின்ற ஊடகவியலாளர்களைப் போற்ற வேண்டியதும், அவர்தம் பெரும்பணிகளை அங்கீகரிக்க வேண்டியதும் அரசு மற்றும் குடிமக்களின் தலையாயக் கடமையாகும்.
அண்மைக் காலங்களில் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்குமெதிராக ஆளும் அரசுகள் கட்டவிழ்த்துவிடுகிற நெருக்கடிகளும், கருத்துரிமை மீதானத் கோரத்தாக்குதல்களும், அரசப்பயங்கரவாதச் செயல்பாடுகளும் இந்நாட்டின் சனநாயகத்தன்மையையே முற்றிலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. எவ்விதப் பக்கச்சார்புமற்று தன்னிச்சையாகவும், தன்னியல்பாகவும் இயங்கி, சுதந்திரமாகச் செயற்பட வேண்டிய ஊடகத்துறை மீது செலுத்தப்படும் இவ்வகை அதிகாரப்பாய்ச்சல்களும், கொடும் அணுகுமுறைகளும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.
அத்தனை அடக்குமுறைகளையும் மீறி, தடைகளையெல்லாம் தாண்டி மக்களாட்சிக்கோட்பாட்டினைக் காக்க அநீதிகளுக்கு எதிராகக் களத்தில் நின்று பெரும்பணியாற்றும் அறம் சார்ந்த ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த ஊடகவியலாளர்கள் நாள் நல்வாழ்த்துகள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.