மனைவி கதாபாத்திரங்களில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று நடிகை மீனாட்சி சவுத்ரி கூறியுள்ளார்.
தமிழில் சினிமாவில் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ மற்றும் விஜய்யின் ‘தி கோட்’ ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார். இவர் குறுகிய காலத்திலேயே சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியான படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதில் துல்கர் சல்மானின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரி அடுத்து நடிக்கும் படங்களுக்கு புதிய நிபந்தனை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் தொடர்ந்து சில படங்களில் மனைவி கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறேன். லக்கி பாஸ்கர் படத்தில் மனைவியாக நடித்து இருந்த எனக்கு பாராட்டுகள் கிடைத்தது. ஆனாலும் சிலர் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே மனைவி கதாபாத்திரங்களில் நடிக்காமல் இருப்பதுதான் நல்லது. அப்படி நடிக்க உனக்கு இன்னும் காலம் இருக்கிறது என்றனர். எனவே இதுபோன்ற கதாபாத்திரங்களில் இனிமேல் நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன். அடுத்ததாக ஆக்சன் படத்தில் நடித்து வருகிறேன், அதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.