கருணாநிதி சிலையை உடைக்க முற்பட்டால் அதற்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்பட தமிழக அரசின் திட்டங்களுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டு வருகிறது. அதேபோல கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், நூலங்களும் திறந்து வைக்கப்படுகின்றன.
ஆனால், அனைத்து திட்டங்களுக்கும் கலைஞர் பெயர் வைக்கப்படுவதாக அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், 94வயது வரை தமிழினத்திற்காக உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் வேறு யார் பெயரை வைப்பது என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் முன்பே ராஜசேகர ரெட்டி சிலை உடைக்கப்பட்டது, அதே நிலை தமிழ்நாட்டிலும் உண்டாகும் என்று தெரிவித்தார். அதாவது, கருணாநிதி சிலைகள் உடைக்கப்படும் என்ற பொருள்படும்படி அவர் பேசினார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
கலைஞர் சிலையை சீமான் எந்த வகையில் உடைக்கிறேன் என்று சொன்னார் எனத் தெரிந்தால் அதே வகையில் அவருக்கு பதில் தரப்படும். கலைஞர் உடன்பிறப்பு என்ற ஒற்றை வார்த்தையால் தூக்கி நிறுத்திய கரங்கள் ஒரு கோடிக்கு மேல் உள்ளன. ஒரு சில லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட சீமான் உடைய கரங்களே சிலையை உடைக்க முற்படுமானால், உடைக்கும் கரங்களை, ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ள கரங்கள் எப்படி பதம் பார்க்கும்?
திமுகவினர் சமத்துவம், சமாதானம் பேசுவதால் நாங்கள் கோழைகள் என்று எண்ணிவிட வேண்டாம். எங்களுக்குள்ளும் வீரம் இருக்கிறது. சீமான் ஒரு வாய்ச் சொல் வீரர். சீண்டல் என்பது வார்த்தையில் இருக்கக் கூடாது, செயலில் இருக்க வேண்டும். முதலில் அவர் தேர்தல் களங்களில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். இதனை தவிர்த்து வாய்க்கு வந்ததை பேசிவிட்டு போவதில் எந்த பயனும் இல்லை.
திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது. சிறிய அளவில் ஏற்பட்ட சினத்தால் இந்த நிகழ்வு நடந்ததாக, அந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது தெரியவருகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் நடைபெற்ற சம்பவம்போல இனி வேறெங்கும் நடக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.