தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளியில் இன்று காலை வகுப்பறை ஒன்றில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் 26 வயதாகும் ஆசிரியை ரமணி. இவரை மர்ம நபர் ஒருவர் இன்று காலை வகுப்பறையிலேயே வைத்துக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஆசிரியை சரிந்ததார். இதை கண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். உடனடியாக சக ஆசிரியர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே ஆசிரியை ரமணியை கத்தியால் குத்திய மதன் என்பவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். மதன், ஆசிரியை ரமணியை காதலித்து வந்துள்ளார். ஆனால் ஆசிரியை ரமணி மதனினை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார். இந்த ஆத்திரத்தில் தான் கத்தியை மறைத்து வைத்து எடுத்துக் கொண்டு சென்று வகுப்பறையிலேயே ஆசிரியை ரமணியை குத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தஞ்சாவூரில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், குற்றவாளி மீது கடும் சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதுபற்றி எக்ஸ் தளத்தில் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.