லஞ்சம், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்தியத் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சோலார் ஒப்பந்தத்துக்காக அதானி இந்திய அதிகாரிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள்ளார். அதனை மறைத்து போலி அறிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும் உலக முதலீட்டாளர்களிடம் இருந்து அதானி நிதி பெற்றுள்ளார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. மேலும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களும் இருப்பதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-
அமெரிக்க நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள இந்தக் குற்றச்சாட்டின் மூலமாக இந்திய மற்றும் அமெரிக்க சட்டத்தை அதானி மீறியுள்ளது அம்பலமாகியுள்ளது. இருந்தும்கூட, அதானி இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறதிது.
இந்த நாட்டில் பல முதல்வர்கள் எளிதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால், ரூ.2000 கோடி ஊழல் செய்தவருக்கு பிரச்சினையே இல்லை. அவர் கைது செய்யப்பட மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால் அதானியை இந்திய பிரதமர் பாதுகாக்கிறார். மோடி – அதானி ஊழலில் கூட்டு என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை, நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்த குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம்.
“குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்” என்று அமெரிக்க நீதித்துறையே கூறி இருக்கிறது. எனவே, சாத்தியமான அனைத்து சட்ட வழிகளும் ஆராயப்படும். அதானி குழுமம் எப்பொழுதும் உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறையை பராமரிப்பதில் உறுதியாக உள்ளது. எங்கள் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு, அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குகிறோம் என்று உறுதியளிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.