தமிழ் மக்களான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை அவதூறாக, கேவலமாக, தரம்தாழ்ந்து பேசிய சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் என்று அழைக்கப்படும் ஓவியாவை கைது செய்யாமல் அமைதி காப்பது ஏன்? என்று பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நேற்றைய தினம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் அறிக்கை ஒன்றை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “தேவேந்திர குல வேளாளர் மக்களை பொது மேடையில் இழிவாக பேசிய தோழர். ஓவியா அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகில் நெல் நாகரிகத்தை கற்று கொடுத்த வரலாற்று பெரும்பான்மை சமூகமான தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை இழிவான வார்த்தைகளால் பேசிய திருமதி. ஓவியா வள்ளிநாயகம் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் மிக பெரும்பான்மையான சமூகம் தேவேந்திர குல வேளாளர் சமூகம். நெல் நாகரீகத்தை கண்டறிந்து மானுடம் உயிர் வாழ வேளாண்மை செய்யும் தேவேந்திர குல வேளாளர்களை கேவலமான வார்த்தைகளால் பேசிய தோழர். ஓவியா அவர்களை கைது செய்ய வேண்டுமென தமிழக காவல் துறையை கேட்டு கொள்கிறேன். வன்முறையை தூண்டும் வகையில் தேவேந்திர குல வேளாளர்களை அவர் பேசியுள்ளார். தேவேந்திர குல வேளாளர்களுக்கு தோழர். ஓவியா அவர்கள் வரலாற்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை . தேவேந்திர குல வேளாளர்கள் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு ஓராண்டு கடந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கருப்பு சட்டை தொடர் போராட்டத்தின் விளைவாக தேவேந்திர குல வேளாளர் என்று தலை நிமிர்ந்துள்ள நிலையில் திட்டமிட்டு அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தோழர் ஓவியா அவர்கள் இந்த கருத்தை பொது மேடையில் பதிவு செய்திருப்பதாக நான் கருதுகிறேன் . அவரை மீண்டும் வன்மையாக கண்டிக்கிறேன் .
இது போன்ற பேச்சுக்களை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும். பெரும்பான்மையான மக்களின் தேவை என்ன கோரிக்கை என்ன என்று உணர முடியாதவர்கள் அற்ப அடையாள அரசியலுக்காக பேசுவது சமூகத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளது. எனவே அவரை தமிழக காவல் துறை கைது செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் தளப்பதிவில் இதே கருத்தை வெளியிட்டு, ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அந்த பதிவில், ”தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக சொல்லி துடி துடித்து நடிகை கஸ்தூரியை கைது செய்து நீதியை நிலை நாட்டியதாக மார் தட்டிக்கொண்ட தமிழக அரசு, நம்முடைய தமிழ் மக்களான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை அவதூறாக, கேவலமாக, தரம்தாழ்ந்து பேசிய சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் என்று அழைக்கப்படும் ஓவியாவை கைது செய்யாமல் அமைதி காப்பது ஏன்?
மிக கேவலமாக அச்சமுதாய மக்களின் பிறப்பு குறித்து பேசியும் இது வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? உடனடியாக வன்கொடுமை சட்டத்தில் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் (PCR) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலுங்கு மக்கள் மீது உள்ள அன்பும், பாசமும் ஏன் தமிழர்கள் மீது அதுவும் பட்டியலினத்தவர் மீது இல்லை? ஓ!! நீங்கள் நீதிக்கட்சியின் நீட்சி என்பதால் தானா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.