சங்கி என்றால் சக தோழன் என்று அர்த்தம்: சீமான்!

ரஜினிகாந்த், சீமான் சந்திப்பு சமூகவலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது. கடந்த காலங்களில் ரஜினியை கடுமையாக விமர்சித்த சீமான் அவரை சந்தித்திருப்பதை திமுக மற்றுத் தவெக நிர்வாகிகள் விமர்சித்து வருகின்றனர். இந்த சந்திப்பு குறித்து சீமான் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். சங்கி என்ற விமர்சனத்துக்கும் அவர் புதிய விளக்கம் கொடுத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்தை நேற்று சந்தித்தார். இது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நீண்ட நாள்களாகவே நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்,. அது கை கூடவில்லை. நேற்று இருவரும் திட்டமிட்டபடி சந்தித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. பார்ப்பவர்களுக்கு ஐயப்பாடு வரவேண்டும் என்பதற்காக தான் சந்தித்தோம். ரஜினி தொடர்ந்து நல்லப்படங்களில் நடித்து வருகிறார். ரஜினிக்கு திரையுலகில் நிறைய அனுபவம் உள்ளது. என்னைவிட நிறைய தலைவர்களுடன் நெருங்கி பழகியுள்ளார். அரசியல் ஒரு ஆபத்து நிறைந்த கொடூரமான விளையாட்டு. பேச்சுகள், அவதூறுகளை தாங்க வேண்டும். இன்றைய சூழலில் நேர்மையானவர்கள் அரசியலில் செயல்படுவது கடினம். நிறைய நேரம் பேசினோம். அது எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாது.

அரசியல், சினிமா குறித்து விவாதித்தோம். ரஜினிகாந்த் சொன்னது போல அரசியலில் வெற்றிடம் இருக்கத்தான் செய்கிறது. நல்ல தலைமையை மக்கள் தான் முடிவு செய்வார்கள். தலைவர்கள் உருவாக்கப்படுபவர்கள். மக்களின் கவலை கண்ணீரில் இருந்து தலைவர்கள் உருவாக வேண்டும். அப்படி உருவானால் மட்டுமே அந்தத் தலைவருக்கு மக்களின் கவலை, கண்ணீர் தெரியும். அதுபோன்ற தலைவர்கள் தற்போது இல்லை. அவர் சொன்னது சரி தான். வாக்குகள் நன் மதிப்பால் பெறப்படுவதில்லை. விலை கொடுத்து வாங்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்தால் மக்கள் அந்த தலைவரை கொண்டாடுவார்கள். இன்றைக்கு ஆட்சியாளர்களே அவர்களை கொண்டாடிக் கொள்கிறார்கள்.

முன்பு எல்லாம் ஒரு தலைவர் வரும்போது மக்கள் தன்னெழுச்சியாக வருவார்கள். இப்போது அப்படியில்லை. தன்னெழுச்சி இருந்தால் வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை. இங்கு தேர்தல் அரசியல் தான் செய்யப்படுகிறது. மக்கள் அரசியல் செய்யப்படுவதில்லை. அந்த அமைப்பு சரியில்லை என்று நானும், ரஜினிகாந்தும் முன்பே சொல்லியிருக்கிறோம். அதைப்பற்றி தான் பேசினோம். நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அரசியல் தான். அரசியல் என்பது வாழ்வியல். இங்கு அரசியல் என்பது எதுவுமில்லை. அரசை தீர்மானிப்பது அரசியல் தான். விமர்சனத்தை கடக்க முடியாதவர்களால் இலக்கை அடைய முடியாது.

சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று தான் அர்த்தம். இவர்கள் சங்பரிவாரில் இருந்து எடுத்து சங்கி என்கிறார்கள். எங்களை விமர்சிப்பவர்கள் தான் உண்மையான சங்கி . திடீரென்று அப்பாவும், மகனும் சென்று பிரதமரை சந்திக்கிறார்கள். எதற்காக அந்த சந்திப்பு என்று கூட சொல்லவில்லை. திமுக – பாஜக இடையே கள்ள உறவல்ல. நல்ல உறவே உள்ளது. பொண்ணு கொடுத்த சம்மந்தி போல சந்தித்து கொள்கிறார்கள். ஆனால் எங்களை சங்கி என்று விமர்சிக்கிறார்கள். திமுகவை எதிர்த்தாலே சங்கி என்றால் எப்படி. அதை நாங்கள் பெருமையாக ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.