தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முயற்சிக்கும்: கார்த்தி சிதம்பரம்!

‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முயற்சிக்கும்’ என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். அதைத்தான் திருமாவளவன் கூறியுள்ளார். அவரது கருத்து நியாயமானதுதான். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாததால் அதிமுகவில் தற்போது குழப்பம் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைப்பது என்பது உடனடியாக நடக்காது. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். முதற்கட்டமாக கூட்டணி ஆட்சியில் பங்கு பெற முயற்சிப்போம். பின்னர் தனித்து ஆட்சி அமைக்க பாடுபடுவோம்.

தனிப்பட்ட விரோதத்தால் நடைபெறும் குற்றங்களை காவல் துறையால் தடுக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவை பள்ளி, நீதிமன்றம், மருத்துவமனை வளாகங்களில் நடந்துள்ளன என்பது கவலையளிக்கிறது. மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் திரட்டிய நிதியை இந்திய அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சமாக கொடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கு மத்திய அரசும், பிரதமரும் எந்த கருத்தும் கூறவில்லை. இப்பிரச்சினை குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.