ஈஷா யோக மையம் விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: முத்தரசன்!

அதிமுக முன்னாள் அமைச்சரின் பினாமி சொத்துகள் முழுவதும் ஈஷா யோகா மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதனால்தான் கடந்த காலங்களில் ஈஷா மீதான புகார்கள் மீது எந்த நடவடிக்கைகள் இல்லை என்றும், திமுக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஈஷா யோக மையம். இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்தோரும் வந்து செல்வது வழக்கம். மஹா சிவாரத்திரி இங்கு கோலாகலாமாக கொண்டாடப்படும். இங்கு ஆசிரமத்தில் தங்கி பலரும் சேவையாற்றி வருகின்றனர். ஈஷா யோக மையம் சார்பில் இலவச நடமாடும் மருத்துவமனை, விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள், மருத்துவ ஆலோசனைகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தருவது வழக்கம். ஒருபக்கம் ஈஷா அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வந்தாலும், பல்வேறு புகார்களும் அந்த நிறுவனத்தின் மீது உள்ளது. கோவை ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் அந்த மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது கைப்பற்றபட்ட பொருட்கள் மற்றும் கிடைத்த தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த தடை இல்லை என நீதிமன்றமும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், ஈஷா யோகா மையம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக விசாரணையை துவங்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பினர் கோவை சிவானந்தா காலனி பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இந்த ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஈஷா யோகா மையத்தில் தங்கி இருக்கும் பெண்களைப் போல வேடம் அணிந்தபடியும், கும்மி அடித்தபடி நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்தனர். தமிழக அரசு உடனடியாக விரைந்து செயல்பட்டு ஈஷா யோகா மையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து முத்தரசன் கூறியதாவது:-

சட்டவிரோதமான காரியங்கள் ஈஷா மையத்தில் தொடர்கின்றது. அரசு நிலம் அபகரிக்கப்பட்டு இருக்கின்றது. தகன மேடை வைத்திருக்கின்றனர். பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்து இருக்கின்றனர். ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈஷா குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். சாமியார் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், அதிமுக முன்னாள் அமைச்சரின் பினாமி சொத்துகள் முழுவதும் ஈஷா யோகா மையத்தில் பாதுகாக்கபட்டு வருகின்றது எனவும், அதனால் கடந்த காலங்களில் அந்த மையம் மீது புகார்கள் வந்த போது நடவடிக்கைகள் இல்லை எனவும், திமுக அரசு இதில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். மேலும், யோகா மையத்தில் தகன மேடை அமைக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய அவர் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.