அருந்ததியருக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தவறானது என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீடு எதிர்ப்பில் ஆக்ரோஷமாக இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-
கேள்வி: அருந்ததியருக்கான உள் இட ஒதுக்கீட்டை இத்தனை கடுமையாக நீங்கள் எதிர்ப்பது ஏன்?
பதில்: அருந்ததியருக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தவறானது. இந்திய அரசியல் சாசனத்தின்படி, கல்வியிலும் சமுதாய ரீதியாகவும் பின்தங்கிய மக்களை உள்ளடக்கிய அட்டவணைப் பிரிவு தயாரிக்கப்பட்டு, அதில் எந்த ஒரு பிரிவினரையும் நீக்குவது அல்லது சேர்க்கும் உரிமை முழுமைக்கும் இந்திய ஜனாதிபதியின் அதிகார வரம்பிற்குள் உட்படுத்தப்பட்டுள்ளது. பட்டியல் பிரிவினருக்கான 18 சதவீதத்தில் 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததுடன், எஞ்சியுள்ள 15 சதவீதத்திலும் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர் எனும் மிக மிகச் சிறுபான்மையினர் கபளீகரம் செய்ய அனுமதித்தது எப்படி செல்லுபடியாகும்? இது எப்படிச் சமூக நீதியாகும்? இந்த அநியாயத்தை எதிர்க்காமல் எப்படி இருக்க முடியும்?”
கேள்வி: இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் தான் நிரப்பப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: அவ்வாறு ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும், பின்னடைவு பணியிடங்களை நிரப்பச் சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு தமிழக அரசு ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் வைத்து பட்டியலின மக்களுக்கான முழுப்பின்னடைவுப் பணியிடங்களையும் நிரப்பியிருந்தால் அது முழுக்க முழுக்க தவறான நடவடிக்கை ஆகும்.
கேள்வி: இந்த விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவனையும் தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேசுவதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா?
பதில்: முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதில் எனக்கு எவ்விதமான சிக்கலும் இல்லை. மாஞ்சோலை பிரச்சினை உச்சகட்டமாக இருந்தபோது 2024 ஜூன் மாதம் 8-ம் தேதி அவர் கோவை வந்தார். அவரை பார்ப்பதற்கு அனுமதி கேட்டோம். அப்போதும் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல, நவம்பர் 7-ம் தேதி சென்னையில் நாங்கள் நடத்திய பேரணிக்குப் பிறகு 8-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளரைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தோம். அவரும் நேரம் ஒதுக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளைக் கையாளுவதில் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இதுபோன்று காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொண்டதில்லை.
கேள்வி: மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் பிரச்சினையைத் தமிழக அரசு கையாளும் விதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: தவறானதாகவும், அரசின் அணுகுமுறை முற்றிலும் எதேச்சதிகாரப் போக்குடனும் உள்ளது. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பாக அங்கு குடியேறியவர்கள். பல்லாயிரக்கணக்கானோரின் வியர்வையாலும், ரத்தத்தாலும் உழைப்பாலும் 8,373 ஏக்கரில் அமைந்த தேயிலைத் தோட்டங்கள் எத்தனையோ ஆயிரம் கோடிகளை ஈட்டித் தந்துள்ளன. அந்த வனப்பகுதியை சோலையாக்க தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த மக்களுக்கு குடும்பத்திற்கு 2 முதல் 5 ஏக்கரைப் பிரித்துக் கொடுத்து, அங்கேயே வாழ வைக்க மனமில்லாமல் அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்ற தமிழக அரசு துடிக்கிறது.
கேள்வி: தமிழகத்தில் இனியும் சாதிகளுக்காக கட்சி நடத்துவது அவசியம் என நினைக்கிறீர்களா?
பதில்: கடந்த காலங்களைப் போல இன்று சாதியக் கூறுகள் இல்லை. அதற்காக சாதியப் பிரச்சினைகளே இல்லை என்று பொருள் அல்ல. சாதியக் கொடுமைகளும் அதனுடைய தூக்கல்களும் வெவ்வேறு விதங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே, கல்வி, பொருளாதார, சமூகத் தளத்தில், அரசியல் மட்டத்தில் சமநிலை அடைகின்ற வரையிலும் உண்மையான சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் போராடும் ‘சாதி ஒழிப்புக் கட்சிகள்’ மிக அவசியம்.
கேள்வி: இமானுவேல் சேகரன் சுதந்திரப் போராட்டத் தியாகியே இல்லை. அதனால் அவருக்கு அரசுப் பணத்தில் மணி மண்டபம் கட்டக்கூடாது என சிலர் கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்களே..?
பதில்: ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியினருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட ‘கை ரேகை’ சட்டத்தை எதிர்த்த ஒருவர் சுதந்திரப் போராட்டத் தியாகி என்றால், சாதிய மூர்க்கத்தனத்தின் கொடுமைகளுக்கு ஆளான மக்களின் விடுதலைக்குப் பாடுபட்ட இன்னொரு தலைவரும் சுதந்திர போராட்டத் தியாகிதானே! இமானுவேல் சேகரனின் மணி மண்டபத்தை எதிர்ப்பவர்கள் மனித நேயமற்ற சாதிய வன்மம் கொண்டவர்கள் என்றுதான் கூற வேண்டும்.
கேள்வி: அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்டோரை வழிகாட்டியாக்கி புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் தேறுவாரா?
பதில்: விஜய்யின் அரசியல் புதிதாக மட்டுமல்ல, புரட்சிகரமாகவும் இருக்கிறது. கடந்த 73 வருடங்களாக ஆட்சியில் இருந்த யாருமே ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோஷத்தை முன்னெடுக்கவில்லை. தமிழக மக்களுக்குத் தேவை இப்போது கூட்டணி ஆட்சிதான். எனவே, மிக முக்கியமான ஒரு தருணத்தில் கூட்டணி ஆட்சி என்ற ஓர் அஸ்திரத்தை அவர் கையிலெடுத்திருக்கிறார். இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழக கட்சிகள் நழுவவிடமாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
கேள்வி: நான்கு முனைப் போட்டி ஏற்பட்டால் அது திமுகவுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறதே..?
பதில்: கடைசி வரையிலும் அப்படித்தான் திமுக பிரச்சாரம் செய்யும். அது ஒன்றுதான் அவர்களின் பேராயுதம். 5 அல்லது 6 கட்சிகள் இடம்பெறுவதால் மட்டுமே திமுக கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்று எண்ணக்கூடாது. அவர்களும் சேர்ந்தே தோல்வியைத் தழுவுவார்கள்.
கேள்வி: அண்டை மாநிலங்கள் எல்லாம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழக அரசு மவுனம் காக்கிறதே?
பதில்: இதில் மட்டும் தான் மவுனமா? திமுக கொடுத்த எந்தெந்த வாக்குறுதியைக் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றியிருக்கிறார்கள்? நீட் ஒழிப்பு என்னாயிற்று? தமிழ்நாட்டில் திமுக என்ன சொல்கிறதோ அதைத் திருப்பிச் சொல்வது மட்டும் தான் தங்களுடைய வாழ்நாள் லட்சியம் என பல கட்சிகள் மாறிவிட்டன. கூட்டணி என்பதற்காக எதையும் விட்டுக் கொடுக்கவும், விட்டு விடவும் தயாரான பிறகு, அறிவாலயத்திலிருந்து தயாரிக்கப்படும் கதை வசனங்களுக்கு ஆடவும் வேண்டும், பாடவும் வேண்டும். மொத்தத்தில், கூட்டணியில் இணைந்து மக்களுக்காக வலுவான குரல் எழுப்ப வேண்டியவர்கள் ‘கோவிந்தா கோஷம்’ போடும் நிலைக்குச் சென்றுவிட்டார்கள்.
கேள்வி: 2026 தேர்தலில் திமுக தலைவர் 200 தொகுதிகள் டார்கெட் வைத்திருக்கிறாரே.. சாத்தியமா?
பதில்: எந்த ஒரு தலைவரும் கனவுகள் காண்பதற்கும் கற்பனைகள் செய்வதற்கும் தடை விதிக்க முடியாது. திமுக 200 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பது அதீத நம்பிக்கை. இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளாளுக்கு கோஷம் போட முயற்சிக்காமல் ஆளும் கூட்டணியை 234 இடங்களிலும் தோற்கடிக்க ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.