’எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது நம் முழக்கம்: மு.க.ஸ்டாலின்!

முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதில் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது நம் முழக்கம் என்று பேசினார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவையின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், இசை விழா- விருதுகள் வழங்கும் விழா சென்னை அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிகர் சத்யராஜுக்கு ‘கலைஞர் விருது’, திருப்பாம்புரம் டி.கே.எஸ்.மீனாட்சி சுந்தரத்துக்கு ‘ராஜரத்னா விருது’, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு ‘இயல் செல்வம் விருது’, முனைவர் காயத்ரி கிரிஷுக்கு ‘இசைச் செல்வம் விருது’, திருக்கடையூர் டி.எஸ்.உமாசங்கருக்கு ‘நாதஸ்வரச் செல்வம் விருது’, சுவாமிமலை சி.குருநாதனுக்கு ‘தவில் செல்வம் விருது’, முனைவர் தி.சோமசுந்தரத்துக்கு ‘கிராமியக் கலைச் செல்வம் விருது’, பார்வதி ரவி கண்டசாலாவுக்கு ‘நாட்டியச் செல்வம் விருது’ ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார்.

பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

முத்தமிழ்ப் பேரவை தொடங்கிய காலத்தில் இருந்து ஆண்டுதோறும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நேரத்தை ஒதுக்கி, தனது கடமையாக கருதி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வந்தார். அவர் வழியிலே நானும் எனது கடமையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன். இயல், இசை, நாடகத்தில் முத்திரை பதித்து முத்தமிழாக வாழ்ந்தவர் கருணாநிதி. முத்தமிழ்ப் பேரவை வழங்கும் இந்த விருதானது, கருணாநிதியே வழங்கும் விருது மாதிரி.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது நம் முழக்கம். அந்த வரிசையில் இசையிலும் தமிழ் ஒலிக்கனும். செழிக்கனும். இடையில் சாதி, மதம் என்ற அந்நிய மொழிகளில் பண்பாட்டு தாக்குதல்கள் நடந்தாலும் எல்லாத்தையும் தாங்கி, தமிழும், தமிழினமும், தமிழகமும் நின்று நிலைக்க தமிழின் வலிமையும், நம் பண்பாட்டின் சிறப்பும் தான் காரணம். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும், கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண்போல் காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், கலைஞர் விருது பெற்ற நடிகர் சத்யராஜ் ஏற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் வாங்கிய ஒவ்வொரு விருதும் கலைஞர் கையில்தான். முதல் விருது, சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்திற்காக சிறந்த வில்லன் விருது. வில்லனாக அறிமுகமான நான், அதற்கான விருதை கலைஞர் கருணாநிதியிடம்தான் பெற்றேன். அதன்பிறகு, கதாநாயகனாக முதல் விருதும் அவரிடம்தான் பெற்றேன். தற்போது முதன்முறையாக கலைஞர் பெயரில் அதுவும் முதலமைச்சர் கையில் இருந்து பெற்றுள்ளேன். இந்த விருது எனக்கு கிடைத்ததற்கு தளபதி ஸ்டாலினுக்கு நன்றி கூறுகிறேன். இது கிட்டத்தட்ட சுயநலமான ஒரு நன்றி தான். ஆனால் பொதுநலத்தோடு நான் அவருக்கு நன்றி கூற வேண்டும் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அவர் தமிழகத்திற்கு செய்து வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்காக அவருக்கு நான் உங்களது சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

கலைஞரை பற்றிக் குறிப்பிடும்போது அனைவரும் “ஓய்வறியா சூரியன்” என்று குறிப்பிடுவார்கள். அவரைப்போலத்தான் நமது ஸ்டாலினும் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். அப்படி ஓயாமல் உழைக்கின்ற ஒரு உழைப்பிற்கு சொந்தக்காரர் முதல்வர் ஸ்டாலின். அவருடைய தலைமையில் தமிழகத்திற்காக தினம் தினம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. தமிழகத்தில் வாழும் சாதாரண ஒரு குடிமகனாக எனக்கு அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பல மொழிப் படங்களில் நடிக்கிறேன். ஷூட்டிங்கிற்காக பல மாநிலங்களுக்கு சென்று வருகிறேன். அங்கெல்லாம் சென்று வரும்போது தான், தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று தெரிகிறது. பிற மாநிலங்களுக்கு சென்றால், அதன் தலைநகரம்தான் அழகாக இருக்கும். ஆனால் உள்ளே பயணித்தால் அதன் நிலை வேறு மாதிரி இருக்கும். ஆனால் தமிழ்நாடு அப்படியல்ல, எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரி செழிப்பாக இருக்கும். வளர்ச்சி இருக்கும்.

தமிழ்நாட்டைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வேலை தேடி வர காரணம் இரண்டு விஷயங்கள். தமிழ்நாடு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. 1967க்குப் பிறகு திராவிடக் கருத்தியலோடு கூடிய அரசுகளால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து மிகச்சிறந்த இடத்தை எட்டி உள்ளது. வட மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களிடம் திராவிடக் கருத்தியலை போதிக்க வேண்டும். பிற மாநிலத்தவர்களிடம் நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு காரணம் திராவிடத் தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் என்று நாமே சொல்லி கொடுக்க வேண்டும். பீகாருக்கு, உத்தர பிரதேசத்துக்கு போய் அவர்கள், எப்பங்க நம்ம ஊரு தமிழ்நாடு மாதிரி ஆகும் என அவர்கள் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.