மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடக்க வாய்ப்பு எதுவும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கும் கருத்தால் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் மகா விகாஸ் அகாடி மாஸ் வெற்றியைப் பெற்றது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் அகாடிக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவுக்கு பிந்தைய தேர்தல் கருத்து கணிப்புகளும் இதனை உறுதிப்படுத்தி இருந்தன. ஆனால் மகாராஷ்டிராவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது அனைத்தும் தலைகீழாகிப் போனது. முதலில் மகா விகாஸ் அகாடி முன்னிலையில் இருந்தது; பின்னர் மகா விகாஸ் அகாடி- மகாயுதி கூட்டணி சமபலத்தில் இருந்தன; ஒரு கட்டத்தில் மகா யுதி கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. இது ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணியான மகா விகாஸ் அகாடியில் உள்ள கட்சிகளை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மட்டுமே 230 தொகுதிகளை அள்ளியது. மகாராஷ்டிரா சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி என்பதே இல்லாத நிலைமை உருவாகிவிட்டது.
இந்த தோல்வியில் இருந்து மகா விகாஸ் அகாடி- இந்தியா கூட்டணி தலைவரகள் இன்னமும் மீளவும் இல்லை. மகாராஷ்டிராவில் மிக மோசமான தோல்வியை தங்களது கூட்டணி எதிர்கொண்டிருப்பதற்கு காரணமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட மோசடிதான் என மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தலைவர்கள் ஒருமித்த குரலில் கூறி வந்தனர். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலேவும் இதனை சுட்டிக்காட்டி இருந்தார். கர்நாடகா அமைச்சர் பரமேஸ்வராவும் மகாராஷ்டிராவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எப்படி எல்லாம் மோசடி நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பியான கார்த்தி சிதம்பரம், டெல்லியில் இன்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி எதுவும் நடக்கவில்லை. 2004-ம் ஆண்டு முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் தேர்தலில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்தது என்பதற்கு இதுவரை ஒரு ஆதாரமும் யாரும் தரவில்லை. இதுதான் என்னுடைய கருத்து. என் கட்சியில் மற்ற தலைவர்களுக்கு வேறு கருத்தும் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பதுதான் நிலைப்பாடு என்றார்.