தாயக விடுதலைக்காகத் தன் இன்னுயிரைத் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளதாவது:-
என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று கார்த்திகை 12 (27-11-2024)
மாவீரர் நாள்!
தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்கு இந்தப் பூமிப் பந்தில் ஒரு தேசம் வேண்டும் என்ற இலட்சியக் கனவோடு தன்னுயிரை தந்த மாவீரர் தெய்வங்களின் புனிதநாள். தமிழர்களின் தாய் நிலமான தமிழீழம் அன்னியர் கைகளுக்குள் அகப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மண்ணைக் காத்து மக்களைக் காத்து தன்னைத் தந்து குலசாமிகளாக மாறிப்போன தியாக வேங்கைகளின் தீர நாள். இந்தக் கார்த்திகை நாளில் காந்தள் மலர் சூட்டி காற்றிலே கந்தகப் பெருமூச்சாய் கலந்து வீரக்காவியங்களாய் நம் நெஞ்சில் உறைந்த மாவீரம் சுமக்கும் வானுறை தெய்வங்களை நெஞ்சுருக வழிபடும் பெருநாள்.
மானுட வரலாறு எத்தனையோ வீரர்களின் இரத்தம் தோய்ந்த பக்கங்களால் நிரம்பி வழிகிறது. எத்தனையோ வீரர்கள் தங்களது வெற்றிகளால் சரித்திரங்களில் நிலைபெற்று இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரையும் தாண்டி எம் தாய் நிலமான தமிழீழ மண்ணை தன் உயிருக்கு மேலாக நேசித்து காத்து நின்ற மாவீரர் தெய்வங்கள் தங்கள் அறத்தாலும் வீரத்தாலும் உயர்ந்து நிற்கிறார்கள்.
தமிழ்த்தேசிய இனத்தின் முகமாக முகவரியாக உள்ளுக்குள் உறைந்திருக்கும் உயிர் ஆற்றலாக திகழும் எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்களனின் வல்லாதிக்க கழுகு நம் தமிழீழ மண்ணை வேட்டையாட சுழன்று பறந்த போது, ஒரு தாய்ப் பறவை எப்படி துடித்து எழுமோ அதுபோல கொதித்து எழுந்து தமிழீழ மண்ணையும் தமிழர்களையும் காத்திட தனது சொந்த மக்களையே ஒரு இராணுவமாக உருவாக்கி மக்கள் தேசியப் படையாக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார்.
வெறும் அரசு அதிகாரத்தை எதிர்த்து போரிடும் கிளர்ச்சிப் படையாக இல்லாமல் மக்களைக் காத்து நின்று நிலத்தை மீட்க தன் இன்னுயிரைத் தந்து உதிரம் சிந்தி களத்திலே போராடிய களங்கமற்ற புலிகள் தான் இதுவரை இந்த உலகத்தில் தோன்றிய புரட்சியாளர்களின் படைகளிலேயே முதன்மையானவர்கள். நாங்கள் ஆயுதங்களை நேசிக்கும் மன நோயாளிகள் அல்ல, தமிழர்களின் தாய் நிலமான தமிழீழ மண்ணைப் பிழைக்க வந்த சிங்களன் அபகரிக்க நின்ற போது, தடுத்து நிறுத்தி, பகை நடுங்க படை நடத்தி உலகத்தை வியக்க வைத்த புரட்சியாளர்கள் என்பதை விடுதலைப்புலிகள் நிரூபித்தார்கள்.
“உயிர் பயம் கொள்ளாதே, அது உன்னைக் கொன்று விடும்!.” என்று சொன்ன புரட்சியாளர் சே குவேராவின் பொன்மொழிக்கு ஏற்ப பயம் என்றாலே என்னவென்று தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கி அதில் இலட்சக்கணக்கான மாவீரர்களை மண்ணின் விடுதலைக்காக மண்ணிலும் கடலிலும் விண்ணிலும் போரிட வைத்தார் எங்கள் தேசியத் தலைவர். அவர் காட்டிய வழியில் மரணத்தைத் தழுவும், விடுதலை என்கின்ற பெரும் இலட்சியக் கனவோடு விண்ணேறி செல்லவும் ஒவ்வொரு நொடியும் எம் இனத்தின் தெய்வங்களான மாவீரர்கள் தயாராக இருந்தார்கள் என்பது தமிழ் இனத்தின் வீர வரலாறு.
எம் மாவீரர்களின் வீரம் என்பது வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருங்கடல். தெற்காசிய பிராந்தியத்தில் வல்லமை பெற்ற நாடுகளாக திகழும் இந்தியா இலங்கை என்கின்ற இரு பெரும் நாடுகளின் இராணுவங்களை, அவைகளுக்கு எல்லா விதத்திலும் துணை நின்ற 20க்கும் மேற்பட்ட உலகத்தின் மாபெரும் நாடுகளின் இராணுவக் கட்டமைப்புகளை 40 ஆண்டுகளாக எதிர்த்து தோல்விகளைப் பரிசாக அளித்த மாவீரர்களின் வீரம் இதுவரை இந்த உலகம் பார்க்காத தீரம்.
உலர்வனத்தில் பற்றிக் கொண்ட நெருப்பு போல சிங்களப் படையினரைச் சுற்றி வளைத்து சிதற அடித்த புலிகளின் படையை எதிர்கொள்ள முடியாமல் திணறிய சிங்கள அரசு உலகம் முழுக்க கையேந்தி நம் மக்கள் இராணுவமான விடுதலைப் புலிகள் அமைப்பை வீழ்த்த தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டும், கொத்துக் குண்டுகளைக் கொண்டும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய போது மக்களைக் காக்க தங்கள் உயிரைக் கொடுத்து தாய் மண்ணை முத்தமிட்டவாறே மரணத்தை புன்னகையோடு வரவேற்றவர்கள் மாவீரர் தெய்வங்கள்.
ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் போர் நடக்கும் போது கூட பயன்படுத்தக்கூடாத, தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், நச்சு வாயுக்கள், கொடும் ஆயுதங்களைப் பயன்படுத்தி தனது சொந்த நாட்டு மக்களின் மீது குண்டுமழையை பொழிந்து இனப்படுகொலை செய்த சிங்கள அரசும், உலக வல்லாதிக்க நாடுகளும் சேர்ந்து மரபு வழியில் வீரச்சமர் புரிந்த தமிழீழ மக்கள் இராணுவமான விடுதலைப் புலிகளின் போரினை முறியடித்தார்கள்.
போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட போரில் காணாமல் அடிக்கப்பட்டவர்களின் கதி என்னவாயிற்று என இதுவரை நமக்குத் தெரியவில்லை. தன் மகனையும் தன் சகோதரனையும் தன் கணவனையும் போரின் போது விசாரணை என்ற பெயரில் சிங்கள இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கொடும் துயரத்திற்கு எதிராக எம் தமிழீழ மக்கள் இன்றளவும் போராடி வருகிறார்கள். தமிழ் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான நீதி உலக அரங்கில் எங்கும் தமிழர்களாகிய நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இன்னமும் எம் தாய் நிலமான தமிழீழ மண் அறிவிக்கப்படாத ஒரு சிறைச்சாலை போல தெருவுக்குத் தெரு காவல் காத்துக்கொண்டிருக்கின்ற சிங்கள இராணுவத்தினரால் காட்சியளிக்கிறது. போரின் போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தமிழர்களின் பூர்வீக நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அண்மையில் தேர்தல் முடிந்து பொறுப்பேற்று இருக்கிற புதிய சிங்கள அரசால் தமிழர்களுக்கு எந்த பலனும் இல்லை. சிங்கள அரசுகள் தமிழீழ மண்ணில் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி அடிமைகளாக வைத்துக் கொண்டு உரிமைகளைப் பறித்துக் கொள்வார்களே தவிர நமக்கான நீதியையும், இறையாண்மை கொண்ட நமது வாழ்வையும் அவர்கள் ஒருபோதும் தர மாட்டார்கள். சிங்கள அரசியல் தலைவர்களின் தோற்றங்கள் தான் வேறு. ஆனால் முகம் ஒன்றுதான். இந்தப் புரிந்துணர்வு எம் தமிழீழ மக்களுக்கு எப்போதும் உண்டு. மாவீரர்களின் புனித நாளான இன்று எந்தக் கனவிற்காக நமது மாவீரர் தெய்வங்கள் இன்னுயிர்களை ஈந்தார்களோ அந்தக் கனவை எப்போதும் மறக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.
இன்று உலகச்சூழல்கள் மாறி இருக்கின்றன. எப்போதும் இல்லாத அளவிற்கு தாயகத் தமிழகத்தில் தமிழர் என்ற இன ஓர்மையினால் லட்சக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் சாதி – மதம் கடந்து நாம் தமிழராய் திரண்டு மாற்று அரசியல் புரட்சியை முன்னெடுத்து தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாக அரசியல் அதிகாரத்தை நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று தாயகத் தமிழகத்தில் எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது திரு உரு எல்லாத் தடைகளையும் தாண்டி ஒவ்வொரு சிற்றூரிலும் ஒவ்வொரு தமிழர் மனதிலும் மாபெரும் பேருருவாய் உயர்ந்து நிற்கிறது.
ஒரு இன அழிவுக்கு உள்ளான தமிழ் இனத்திற்கு ஆதரவான ஒரு சூழல் இன்னும் உலகஅரங்கில் ஏற்படாத நிலையில் தாயகத் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் நம்பிக்கை அளிக்கின்றன. அனைவராலும் கைவிடப்பட்ட புறக்கணிக்கப்பட்ட ஒரு தேசிய இனமாக தமிழர் என்ற தேசிய இனம் இருந்தாலும் தமிழர்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தை நோக்கி நடக்க தொடங்கி இருப்பது எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
மாறிவரும் உலக ஒழுங்குகளை கவனத்தில் கொண்டு தமிழர்களாகிய நாமும் நமது உத்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு தேசிய இனத்தின் முழுமை என்பது அது என்றைக்குத் தனக்கான தேசத்தை அடைகிறதோ அன்றுதான் அது தனது முழு வடிவத்தை பெறுகிறது. உலகத்தில் பல்வேறு தேசிய இனங்கள் தங்களுக்கான தேசங்களைப் பெற பல நூற்றாண்டுகளைக் கடந்து போராடி இருக்கிறார்கள். எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் மாவீரர்களின் புனிதக் கனவான தமிழீழ தேசத்தை அடைய தமிழின இளையோர் தங்களுக்குள்ளாக இந்த புனித நாளில் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும். பாலஸ்தீனம், கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போன்ற பல புதிய நாடுகளின் தோற்றம் நம்மை போன்ற அடிமைப்பட்ட தேசிய இனங்களுக்கு நம்பிக்கைகளை ஊட்டுகின்றன. உலகத் தமிழ்ச் சமூகம் தங்களுக்குள்ளாக இருக்கின்ற வேறுபாடுகளைக் களைந்து, சாதி மதம் கடந்து ஒருங்கிணைந்த உணர்வோடு அறிவார்ந்த திட்டமிடலோடு எதிர்காலத்தைக் கணித்து நிகழ்காலத்தில் மிகச் சரியாக ஒற்றுமையாக இயங்கும் பொழுது தமிழீழம் என்கிற புதிய நாடு பூமிப் பந்தில் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது.
தாயக விடுதலை என்கின்ற மகத்தான கனவிற்காகச் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளான மாவீரர் தெய்வங்களின் மூச்சுக்காற்று இன்னமும் எம்மண்ணில் உலவிக்கொண்டு தான் இருக்கிறது. இனத்தின் விடுதலை என்கின்ற லட்சியக் கனலில் வெப்பமேறி தகிக்கும் அந்த மூச்சுக்காற்று நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நம்மை இயக்குகிற உந்து சக்தியாக திகழட்டும்.
நம் மீது அமில மழையென கொட்டப்படுகின்ற அவதூறு பரப்புரைகள், விலைபோன துரோகங்கள் போன்ற எல்லாவித இடையூறுகளில் இருந்தும், எம்மை நோக்கி வருகிற எல்லாத் தடைகளில் இருந்தும் எம் மாவீரர் தெய்வங்கள் எம்மை காக்கட்டும்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்,
எத்தனை தடைகள் வந்தாலும்,
எத்தனை தலைமுறை மாறினாலும்,
எம் மாவீரர் தெய்வங்கள் சுமந்து நின்ற இலட்சியக் கனவை, தமிழீழம் என்கின்ற விடுதலை இலக்கை, தமிழின இளையோர் தொடர்ந்து முன்னெடுக்க சமரசம் இல்லாமல் தமிழர் உரிமைக்கான தங்களது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என அழைக்கின்றேன்.
எம் மொழி காக்க! இனம் காக்க!
எம் மண் காக்க! மானம் காக்க!
தன்னுயிர் தந்த மாவீரர் தெய்வங்களுக்கு எனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன்!
மாவீரர் சிந்திய குருதி!
தமிழீழம் மீட்பது உறுதி!
தமிழர்களின் தாகம்!
தமிழீழ தாயகம்!