“உப்புச் சப்பில்லாத காரணங்களை கூறி தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த முடியாது என சொல்வது கண்டிக்கத்தக்கது” என பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையில் உள்ளது என்ற பொருள்பட தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய தமிழக அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும், அக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை பரிந்துரைத்ததாகவும், ஆனால், இத்திட்டத்தில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் முதல்வர் கூறியிருப்பது, அக்குழுவின் அறியாமையை வெளிப்படுத்துகிறது.
தையற்கலைஞர்கள், பொற்கொல்லர்கள், செருப்பு தைப்பவர்கள், தச்சு வேலை செய்பவர்கள், படகு செய்பவர்கள் உள்ளிட்ட பதினெட்டு வகையான தொழில்களில் காலங்காலமாக ஈடுபட்டு வருபவர்களுக்கு இந்த மத்திய அரசின் திட்டத்தின் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 30 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலக மயமாக்கலின் வேகத்தை, உள்ளூர் சந்தையின் போட்டியை சமாளிக்க ஒருங்கிணைக்கவே இந்த திட்டம் என்பதை பலமுறை எடுத்து சொல்லியும் இந்த திட்டம் அமல்படுத்த தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
உப்பு சப்பில்லாத காரணங்களை குறிப்பிட்டு, அதை பரிந்துரைகளாக தமிழக அரசின் சார்பாக சொல்லி, இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று சொல்வது பணம் படைத்த முதலாளிகளுக்கே சாதகமாக அமையும். எனவே, மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை பற்றிய முதல்வரின் அறிக்கையை அவர் உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்தி கைவினை கலைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ‘மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும். எனவே, தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது. சமூக நீதி அடிப்படையில், தமிழகத்திலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது’ என்று கூறி, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (நவ.27) கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.