தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாக திமுக அரசு மீது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை இந்து காலேஜ் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளை மதுபோதையில் இருந்த 4 இளைஞர்கள் பிளாஸ்டிக் குழாயால் தாக்கியதாகவும், இந்தத் தாக்குதலில் மின்வாரிய ஊழியருக்கு ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.
இதேபோன்று, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கரூர் பேருந்து நிலையம் அருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. திருச்சி, கருமண்டபம் அருகே குடி போதையில், ஒரு வீட்டின்மீது சிலர் குண்டு வீசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில், இந்தியாவிலேயே போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம் என்று சொல்லும் அளவுக்கு கஞ்சா, மெத்தபெட்டமைன், போதை மாத்திரைகள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்று குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வரும் கொலைக் குற்றங்களில், பெரும்பாலான குற்றங்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் தொடர்புடைய குற்றங்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்
போதைப் பொருட்கள் விற்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிடிபட்டாலும், இதன் விற்பனை அதிகரித்துக் கொண்டே செல்வதும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதும் கண்கூடாகத் தெரிகிறது என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பிடிபடுபவர்களின் எண்ணிக்கை என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்று குற்றம்சாட்டிய அவர், “தமிழ்நாடு போதை நாடாக மாறி வருவதற்குப் திமுகவின் அலட்சியமே காரணம். இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருப்பதற்கு காரணமான திமுக அரசிற்கு கடும் கண்டனம்” என்று கூறியுள்ளார்.
மேலும், “தமிழக மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில், தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வரும் போதை நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்தவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.