எந்த இயக்கத்திற்காக உழைத்தேனோ எந்த இயக்கத்தை நேசித்தேனோ அந்த இயக்கமே என்னை வெளியேற்றியது. திமுகவின் தலைவருக்கு உயிருக்கு உயிரான மெய்காப்பாளராக இருந்து இருக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடையே பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:-
ஈழத்திற்கு சென்று தேசிய தலைவரை சந்திக்க வேண்டும் என சீட்டு மூலம் இரண்டு முறை கூறிய பின்னர்தான் அவர் நான் ஈழத்திற்கு வர சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் இங்கிருந்து புறப்படும் முன் என் மனைவிக்கு பட்டு புடவை என்னுடைய குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் எடுத்து கொடுத்தேன். மீண்டும் நான் வருவேனா என கேள்வி இருந்ததால் இதை செய்தேன். ஆனால், என் மனைவியிடம் திமுக வெற்றி பெற்றதற்கு வாங்கி தந்தேன் என கூறினேன். யாருக்கும் தெரியாமல் ஈழத்திற்கு புறப்படும் முன் கருணாநிதிக்கு 6 பக்கம் கடிதம் எழுதி விட்டு சென்றேன்.
ஈழத்தில் இருந்த நேரத்தில் வைகோ ஈழத்திற்கு சென்றதற்கும் திமுகவிற்கு எந்த சம்மதமும் இல்லை என அறிக்கை வெளியிட்டனர். இதனை தெரிந்துகொண்ட தேசிய தலைவர், உடனடியாக நீங்கள் தமிழ்நாடு செல்ல வேண்டும் என தெரிவித்தார். ஆனால் நான் செல்ல மாட்டேன் என கூறினேன். இருப்பினும் அவர் வலியுறுத்தி கூறியதால் நான் செல்கிறேன் என கூறினேன். அடுத்த நாள் காலை 5 மணிக்கு புறப்படும் முன் எனக்கு புட்டு, மீன், இறால் என விருந்து வைத்தார். ஒருவேளை நான் மாட்டிக்கொண்டால் என்னை சித்திரவதை செய்வார்கள் எனவே எனக்கும் ஒரு விஷ குப்பி வேண்டும் என்று கேட்டேன். இதையடுத்து அவர் தனது கழுத்தில் இருந்த ஒரு குப்பியை எனக்கு வழங்கினார். இப்போதும் அந்த குப்பி பத்திரமாக என்னிடம் உள்ளது. புறப்பட்டு வந்த நேரத்தில் காட்டில் கடும் பசியாக இருந்த நேரத்தில் மான் கறி உள்ளது என கூறியதும் மகிழ்ச்சியுடன் எழுந்து சாப்பிட்டேன். அதன் பின் நடந்தது அனைவருக்கும் தெரியும்.
எந்த இயக்கத்திற்கா உழைத்தேனோ எந்த இயக்கத்தை நேசித்தேனோ அந்த இயக்கமே என்னை வெளியேற்றியது. 30ஆண்டு காலம் திமுகவில் பயணித்தபோது 27 முறை சிறைக்கு சென்றேன். திமுகவின் தலைவருக்கு உயிருக்கு உயிரான மெய்காப்பாளராக இருந்து இருக்கிறேன். ஆனாலும், நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். 1964ல் அண்ணாவின் முன்னிலையில் தான் அங்கீகாரம் பெற்றேன். நான் செல்லாத கிராமங்கள் இல்லை. ஏற்றி வைக்காத திமுக கொடிகள் இல்லை. இதையடுத்து திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மதிமுகவில் 30 ஆண்டுகள் என வாழ்வில் 60 ஆண்டுகள் பொதுவாழ்வில் கடந்து விட்டன. நான் உயிரினும் மேலாக கருதிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, என்னுடன் லட்சக் கணக்கான தொண்டர்கள் வந்தனர். இதில் 300 பொதுக்குழு உறுப்பினர்களும், 9 மாவட்டச் செயலாளர்களும் அடக்கம்.
அப்போது நடைபெற்ற முதல் தேர்தலில் தோல்வியடைந்தவுடன் சிலர் விலகினர். அவர்களை பற்றி வருந்தமாட்டேன். எனினும், முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான பாசம் மறையவில்லை. எந்த பதவியும் கேட்காமல் லட்சக் கணக்கான தொண்டர்கள் மதிமுகவில் இருக்கின்றனர். திமுகவுக்கு வரும் சோதனையை உடைத்தெறிய மதிமுக முதல் அணியாக வரும் என்ற உறுதியில் நாம் இருக்கிறோம். கட்சியில் இளைஞர்களை இணைக்க முயற்சி செய்யுங்கள். கொடி இல்லாத கொடிமரங்களில் கொடிகளை ஏற்றுங்கள். கட்சியை கிளை அளவில் இருந்து வலுப்படுத்துங்கள். காற்று திசைமாறி அடிக்கும். அப்போது அரசியலில் முக்கியமான இடத்துக்கு வருவோம். ஏனெனில் நம்மிடம் ஊழல், துரோகம், ஒழுக்கக் கேடு இல்லை. எனவே, மதிமுக இன்னும் வலுப்பெறும். இவ்வாறு வைகோ பேசினார்.