பாசனக் கால்வாய்களைத் தூர்வாராததால், ஆண்டுதோறும் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில், டெல்டா பகுதியில், சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகியிருக்கிறது. பாசனக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை விடுத்தும், திமுக அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவு, இந்த ஆண்டும் டெல்டா பகுதி சம்பா பயிர்கள் சுமார் 2,000 ஏக்கர் அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, டெல்டா பகுதியில் நடைபெறும் விவசாயம்தான். ஆனால் அதனைக் குறித்துச் சிறிதும் கவலை இல்லாமல், சிலை வைப்பது போன்ற வீண் செலவுகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டை, தாங்கள் கொடுப்பது போல விளம்பரம் செய்வதோடு தங்கள் பணி முடிவடைந்து விட்டதாகக் கருதுகிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். பாசனக் கால்வாய்களைத் தூர்வாராததால், ஆண்டுதோறும் விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி வருவது குறித்து அவருக்கு எந்தக் கவலையும் இல்லை.
உடனடியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள பாசனக் கால்வாய்களை, முழுமையாகத் தூர்வாரும் பணிகளைப், போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 1-ம் தேதி சென்னை திரும்பவுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். அவருக்கு பதிலாக தமிழக பாஜகவை வழிநடத்த மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு செயல்பட்டு வருகிறது. லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அண்ணாமலை, அவ்வப்போது தமிழகத்தில் நடைபெறும் அரசியல் உள்ளிட்ட சூழல்களுக்கான கருத்துகளையும் பதிவு செய்து வருகிறார். அவர் நவ.28-ம் தேதி திரும்புவதாக இருந்த நிலையில், பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவர் டிச.1-ம் தேதி அதிகாலை சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அன்றைய தினம் கோவையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
டிச.1-ம் தேதி அதிகாலை 1 மணியளவில் சென்னை திரும்பும் அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 2-ம்தேதி தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் அவருக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.