நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை என்றும் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் நடிகர் தனுஷின் வழக்கில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதை எதிர்த்து 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சூழ்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி வுண்டர்பார் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அந்த படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது. தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான வீடியோ காட்சிகளுடன் நயன்தாரா திருமண வீடியோவை பதிவை வெளியிட்டுள்ளது. இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இழப்பீடாக ரூ 10 கோடி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகக் கூறி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வுண்டர்பார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் மனுவிற்கு நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரின் வழக்கறிஞர் அளித்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விதிகளை மீறவில்லை. பதிப்புரிமை மீறல் எதுவும் நடக்கவில்லை. திருமண ஆவணப்படத்தில் தனிப்பட்ட காட்சிகள் மட்டும் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மீறல் இல்லை என அவர் பதில் அளித்துள்ளார். எனவே இந்த வழக்கு டிசம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சட்டப்பூர்வமாக விவாகரத்து அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம். இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட்டை போட்டிருக்கிறார். அதில், “பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை நீங்கள் அழித்தீர்கள் என்றால் அதை கடனாக எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கே ஒரு நாள் வட்டியுடன் திரும்ப வரும் என கர்மா கூறுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், இந்தப் போஸ்ட்டின் மூலம் தனுஷைத்தான் நயன் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார். இந்தப் பஞ்சாயத்து இப்போதைக்கு ஓயாதோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.