மேகதாது அணை திட்டம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் சித்தராமையா மனு!

மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கேட்டு பிரதமர் மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மனு அளித்துள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தமிழக விவசாயிகளை பாதிக்கும் என கூறி தமிழ்நாட்டில் இருக்கும் விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சட்ட ரீதியான போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கேட்டு பிரதமர் மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மனு கொடுத்துள்ளார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் மோடியை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது விவசாயம், நீர்வளம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பான கோரிக்கைகளை பிரதமரிடம் சித்தராமையா முன்வைத்தார்.

குறிப்பாக ஜல் சக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் இரண்டு முக்கியமான நீர் திட்டங்களான மேகதாது மற்றும் கலசபந்தூரி திட்டம் ஆகியவற்றை விரைவுபடுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தராமையா கோரிக்கை விடுத்தார்.

மேலும் கர்நாடக மாநிலத்தில், வளர்ந்து வரும் 13 மாநகராட்சிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10,000 கோடியும், கர்நாடகாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நீர்ப்பாசனத்தை உறுதி செய்யும் மேல் பத்ரா திட்டத்திற்கு ரூ.5,300 கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஏற்கனவே மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.