சம்பல் துப்பாக்கி சூடு பாஜகவின் மதவெறியின் உச்சம்: சீமான்!

உத்தர பிரதேசத்தின் சம்பல் மசூதி வன்முறையின்போது 5 பேர் கொல்லப்பட்டது மதவெறியின் உச்சம் எனவும், நாடே சுடுகாடாக மாறும் எனவும் சீமான் கூறி உள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளதாவது:-

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஷாஹி ஜமா மசூதியானது இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி ஆய்வு நடத்திய குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய இசுலாமியப்பெருமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, 5 இசுலாமியர்களைச் சிறிதும் இரக்கமின்றி அம்மாநில பாஜக அரசு படுகொலை செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜமா மசூதி, 1529 ஆம் ஆண்டு முகலாயர் காலத்தில் அமைக்கப்படுவதற்கு முன்பு அங்கு ஹரிஹர் கோயிலிருந்ததாகவும், அந்தக் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டிருப்பதாகவும் கூறி வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மனுத்தாக்கல் செய்யப்பட்ட அன்றே அவசர அவசரமாக விசாரித்த நீதிமன்றம், மசூதி உள்ள இடத்தை அன்றைய தினமே ஆய்வு செய்ய வேண்டுமெனத் தீர்ப்பளித்து, அதற்கென, ஒரு குழுவை அமைத்தும் உத்தரவிட்டது. அதன்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டே அன்றே முதற்கட்ட ஆய்வும் நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக மசூதியை ஆய்வுசெய்யக் கடந்த 24.11.2024 அன்று, ஆய்வுக்குழுவினர் வந்தபொழுது அங்குள்ள இசுலாமியப் பெருமக்கள் ஆய்வு செய்ய எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் உத்தரப்பிரதேச அரசு காவல்துறையை ஏவி, எதிர்ப்புத் தெரிவித்த இசுலாமியப் பெருமக்கள் மீது தடியடி நடத்தி கடுமையாகத் தாக்கியதோடு, துப்பாக்கிச் சூடும் நடத்தியதில் 5 இசுலாமியர்கள் கொல்லப்பட்ட கொடுந்துயரமும் அரங்கேறியுள்ளது.

ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் இராமர் பிறந்த இடம் என்றுகூறி கடந்த 50 ஆண்டுகளாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும், அதன் மதவெறித் தலைமைகளும், மக்களைப் பிளவுபடுத்தி பதற்றமான சூழலை உருவாக்கியதுடன், அதன் காரணமாக நாடெங்கும் நிகழ்ந்த மதக்கலவரங்களில் பல்லாயிரம் மக்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட கொடுமைகளும் நடந்து முடிந்தன. அரசியல் அதிகார வேட்கைக்காகப் பல்லாயிரக்கணக்கான மக்களை பாபர் மசூதி பிரச்சனை மூலம் பலி கொடுத்தது பாஜக.

இறுதியாக ஆட்சி – அதிகாரத் துணையுடனும், நீதிமன்றத்தின் மூலமும் கோயில் கட்ட வேண்டும் என்ற தீர்ப்பினைப் பெற்று இராமர் கோயிலையும் கட்டி முடித்து இசுலாமியப் பெருமக்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்தது மதவாத பாஜக அரசு. அதற்குப் பிறகு மத அரசியல் செய்ய பாஜகவிற்கு வேறு வாய்ப்பில்லாமல் இருந்ததையடுத்து நாடெங்கிலும் பாஜகவின் செல்வாக்கும் சரியத்தொடங்கியது. குறிப்பாக நாடாளுமன்றத்தேர்தலில் வீழ்ச்சியைச் சந்தித்த பாஜக, உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி தொகுதியிலேயே படுதோல்வியையும் சந்தித்தது.

அதுமட்டுமின்றி, உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத்தின புல்டோசர் காட்டாட்சிக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் குட்டு வைத்தது. அங்குள்ள ஜான்சிராணி மருத்துவக்கல்லூரியில் நிகழ்ந்த தீ விபத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்த கொடுந்துயரமும் பாஜக ஆட்சிக்கு பெரும் கரும்புள்ளியானது. அவற்றையெல்லாம் மூடி மறைக்கவே பாஜக அரசு தற்போது மீண்டும் ஒரு பள்ளிவாசலை ஆய்வு செய்ய அனுமதித்து, மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தி மதக்கலவரத்திற்கு வாசல் திறந்துவிட்டுள்ளது. அதனைத் தடுக்க முயன்ற ஐந்து இசுலாமியர்களைச் சுட்டுக்கொன்றதன் மூலம் தனது பாசிசக் கோர முகத்தை பாஜக மீண்டும் காட்டத்துவங்கியுள்ளது.

நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் செய்து ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாத பாஜக, இழந்த செல்வாக்கை மீட்கவே தற்போது மீண்டும் மதவாத அரசியலைக் கையிலெடுத்துள்ளது. இந்த நாட்டிலுள்ள இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலங்களை ஒவ்வொன்றாக இடிப்பதென்றால் அது எங்கே போய் முடியும்? அயோத்தியோடு முடியட்டும் என்றுதான் நாட்டிலுள்ள அனைத்து இசுலாமியப் பெருமக்களும் அயோத்தி தீர்ப்புக்குப் பிறகும் அமைதி காத்தனர். மீண்டும் மீண்டும் இசுலாமியப் பெருமக்களின் வழிபாட்டுத்தலங்களை அழித்தொழிக்கும் அநீதி தொடருமென்றால் இந்நாடு சுடுகாடு ஆவதை எவராலும் தடுக்க முடியாது.

அயோத்திக்குப் பிறகு, இனி எந்தவொரு மாற்று மதத்தினர் வழிபாட்டுத்தலத்தையும் இடிப்பது தொடரக்கூடாது என்றுதான் இந்திய ஒன்றிய அரசால் வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டம் – 1991 (The Places Of Worship Special Provisions Act – 1991) இயற்றப்பட்டது. பாபர் மசூதி நிலப்பிரச்சினையைத் தவிர்த்து, 15.08.1947 ஆம் நாளுக்கு முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டுமென்று அச்சட்டம் கூறுவதுடன், ஒருவேளை வழிப்பாட்டுத்தலம் 15.08.1947 ஆம் நாளுக்கு முன்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தாலும்கூட அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் அச்சட்டம் தெளிவாக வரையறுக்கிறது.

ஆகவே, 1991 சட்டத்தின் படி, ஒரு சமயத்தினரின் அல்லது ஒரு சமயப் பிரிவின் வழிபாட்டுத் தலத்தை, வேறு சமயத்தினரோ அல்லது ஒரே சமயத்தின் வேறொரு பிரிவினரோ ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் கூட அதன்மீது யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் அதன் பிறகும் இந்துத்துவ அமைப்புகள் ஞானவாபி, ஷாஹி ஜமா, அஜ்மீர் தர்கா என்று வேண்டுமென்றே இசுலாமிய வழிபாட்டுத்தலங்களை மட்டும் தொடர்ச்சியாகக் குறிவைத்து தாக்குவதும், மதவாத பாஜக அரசு அதற்குத் துணைபோவதும், இசுலாமியப் பெருமக்கள் மீதான பண்பாட்டு படையெடுப்பே அன்றி வேறில்லை.

அரசியல் சுயலாபத்திற்காக மதவெறியால் மக்களைப் பிரித்து, அதன் மூலம் அரசியல் வெற்றிகளைப்பெற்று, ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு இசுலாமியர்களை அழித்தொழிக்கின்ற பாசிசப்போக்கினை பாஜக அரசு இனியும் கைவிடவில்லையென்றால், அது இந்தியப் பெருநாட்டை பேரழிவை நோக்கிச் இட்டுச்செல்லவே வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறேன். இந்த நாட்டில் சனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மனித உரிமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை உடைய ஒவ்வொருவரும் பாஜக அரசின் இத்தகைய பாசிசப்போக்கிற்கு எதிராக, அறப்போர் புரிந்திட முன்வர வேண்டுமென அழைப்புவிடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.