திருவண்ணாமலையில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்ட நிலையில், சிறுவர்கள் உட்பட 7 பேர் மண்ணுக்குள்ள புதைந்துள்ளனர். இந்நிலையில், மலைப் பாதை என்பதாலும், இடிபாடுகளுடனும் உள்ளதால் மீட்புப் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, வ.உ.சி. நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், ராட்ச பாறையொன்று சரிந்துள்ளதால் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் மக்களின் வீடுகளின் மேல் மண் சரிந்துள்ளது. 35 டன் எடை கொண்ட ராட்சதப் பாறை, சுமார் 20 அடி சரிந்து மண் குவியல்கள் வீடுகளை மூடியுள்ளது. இந்த மண் சரிவு காரணமாக ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. மேலும், 2 வீடுகளும் மண் சரிவுக்குள் சிக்கியுள்ளன. அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர். ராஜ்குமாரின் வீட்டுக்குள் அவரது மனைவி மீனா, அவர்களது குழந்தைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டுக்குள் இருந்தவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து கனமழை பெய்து வந்தததால் அவர்கள் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டுக்குள் இருந்துள்ளனர். அந்த வீட்டில் கெளதம், இனியா என்ற 2 சிறுவர்கள் இருப்பதால் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த தேவிகா, வினோதினி உள்ளிட்ட 3 பேர் அங்கு விளையாடுவதற்காக வந்துள்ளனர். இந்த நிலையில், ராட்சதப் பாறை ராஜ்குமாரின் வீட்டின் மேல் சரிந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறை, தீயணைப்புத் துறை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி. சுதாகர் ஆகியோரும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். மண்ணுக்குள் புதைந்த வீட்டின் மேல் பாறை சரியும் நிலை உள்ளதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில், மீட்பு பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மீட்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அமைச்சருக்கு எடுத்துரைத்தார். முன்னதாக வ.உ.சி. நகர் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அமைச்சர் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாநில கண்காணிப்புக் குழுவினர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பலர் திருவண்ணாமலையில் இரு நாட்களாக இங்கு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த மூன்று தினங்களாக திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது. இதுவரை திருவண்ணாமலையில் மண் சரிவு என்பது ஏற்பட்டதே இல்லை. மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகள் உருண்டு விழுந்து அடிவாரப் பகுதியில் இருந்த 2 வீட்டின் மேல் விழுந்துள்ளது. ஒரு வீட்டில் இருந்தவர்கள் தப்பித்துள்ளனர். இன்னொரு வீட்டில் இருந்த 4 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை, ஒரு பெரியவர், தாய் ஆகியோர் இடர்பாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாழ்வான பகுதியைச் சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணி நடந்து வருகிறது. இடிபாடுகளில் ஏழு பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். மண் மற்றும் கல்லின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், பிற்பகலில் ஐஐடி வல்லுநர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்கின்றனர். மீட்பு பணி மேற்கொள்ளும் இடத்திற்கு அருகே ராட்சத பாறை உள்ளதால் பணி கவனமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மலைப் பாதை என்பதால் இடர்பாடுகளால் மீட்பு பணியை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் நிலவி வருகிறது. மீட்பு பணிக்கு போதுமான அளவில் வீரர்கள் உள்ளார்கள். இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. கற்கள் மற்றும் மண்ணை மனிதர்கள் தான் அப்புறப்படுத்தும் சூழ்நிலை உள்ளது. அந்தப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இந்தப் பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இந்தப் பேரிடரில் சிக்கித் தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.