மழையால் நெல் மூட்டைகள் சேதமாவதை தடுக்கவேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மழையால் நெல் மூட்டைகள் சேதமாவதை தடுக்கவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள 170 மையங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகிவிட்டன. அதனால், அரசுக்கு கோடிக் கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் அரசின் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது தான் இதற்கு காரணமாகும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்தது 5000 மூட்டைகள் இருப்பு வைக்க வசதி தேவை. கொள்முதல் செய்யப்படும் மூட்டைகள் இரு நாட்களுக்கு ஒருமுறை கிடங்குகளுக்கோ, அரவை ஆலைக்கோ கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையின் காரணமாக பல மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளி கிடங்குகளில் தார்பாய் போட்டு மூடாமல் இருப்பதால் நனைந்து வீணாகும் நிலையில் இருக்கிறது. எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க தார் பாய் கொண்டு மூடி சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன், நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளில் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நெல் அதிகமாக விவசாயம் செய்யும் இடங்களில் தானியக்கிடங்குகள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த தீர்மானம் தொடர்பாக விளக்கம் அளித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசிதாவது:-

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் 51 சேமிப்பு கிடங்குகளிலும், 166 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் பாதுகாக்கப்படுகிறது. ஒன்றிய அரசு ஆன்லைன் மூலம் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய அறிவுறுத்தி இருந்தாலும், விவசாயிகளிடம் இதுகுறித்து உரிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளதால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.