திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது. அப்போது மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. அந்த வீட்டில் 7 பேர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது. அவர்கள் 7 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக்குழு,, மாவட்ட போலீஸ் கமாண்டோ குழு, மாநில மீட்பு படை, திருவண்ணாமலை ஆயுதப்படை போலீசார் உள்பட 170 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை அவ்வப்போது பெய்ததால் மழைநீர் வீட்டுக்குள் புகுந்ததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 10 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்ற நிலையில், மாலை 6 மணியளவில் வீட்டிற்குள் சிக்கிய பெண் குழந்தையை சடலமாக மீட்புப்படையினர் மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டபோது ராஜ்குமார், அவரது மனைவி மீனா, கவுதம் மற்றும் இனியா, மகா ஆகிய 5 பேரின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. இதையடுத்து அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் வினோதினி மற்றும் ரம்யா ஆகிய 2 சிறுமிகள் வீட்டின் உள்பகுதியில் சிக்கியதால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. அங்கு மண்ணுடன் சேர்ந்து ஒருபாறையும் இருந்தது. இதையடுத்து அந்த பாறையை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நவீன எந்திரங்கள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பாறையை அப்புறப்படுத்தினால்தான் 2 சிறுமிகளையும் மீட்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 20 மணி நேரமாக நடந்த மீட்பு பணி நேற்று 11 மணியளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலையில் மீண்டும் மீட்பு பணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வீட்டிற்குள் சிக்கியவர்கள் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய ராஜ்குமார் செங்கல் சூளையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மீனா. அவர்களின் 2 குழந்தைகள், பக்கத்து வீட்டு குழந்தைகள் மூன்று பேர் என 7 பேரும் சிக்கியிருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் விவரம் வருமாறு:- ராஜ்குமார் ( வயது 32), மீனா (26), கவுதம் (9), இனியா (7), மகா ( 12), வினோதினி (14), ரம்யா (12) என 7 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது. சிறுவர்கள் 5 பேரும் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மலையில் இருந்து மழை நீரும் பாறையும் உருண்டு வந்ததை பார்த்துள்ளார்கள். உடனே அச்சம் அடைந்து பாதுகாப்பிற்காக வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போதுதான் வீட்டையும் மண் மூடிக்கொண்டு இருக்கிறது. தற்போது 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டு இருக்கும் நிலையில், 2 பேரின் உடல்கள் மீட்கப்படவில்லை
இந்த நிலையில் திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் துணை முதல் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலையில் உண்மையிலேயே மிகவும் துயரமான சம்பவம் நடந்துள்ளது. வ.உ.சி. நகர் மக்கள் வெளியே வரத்தயார் என்றால் அரசு மாற்று இடம் வழங்க தயாராக உள்ளது. மக்கள் வெளியே வந்தால் அவர்களுக்கென தனி திட்டம் போடப்படும். மண் சரிவு தொடர்பாக ஐ.ஐ.டி-க்கு மண் பரிசோதனை தர அறிவுறுத்தி உள்ளோம். மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எஞ்சிய மீட்புப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர், எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட செய்தி, நெஞ்சை பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களின் உயிரை காக்கும் பேரிடர் மீட்பு படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப்பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்பு படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
கனமழை காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு குடியிருப்புகளில் விழுந்ததில் சிக்கியிருந்த 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அதே நேரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற இயற்கை பேரிடர் சூழலில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகளுக்குள் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்த 7 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், ஒரு சிறுவன் உட்பட்ட மூவரின் உடல் மீட்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் முன்னேறிவிட்டதாக பெருமிதப்படும் வேளையில், மண் சரிவில் சிக்கியவர்களை நம்மால் மீட்க முடியவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இத்தகைய சூழல்களில் துரிதமாக செயல்பட்டு, உயிரிழப்புகள் நிகழாமல் தடுப்பதற்கான உத்திகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.