காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், கடற்கரை மாவட்டங்களை புயல்களில் இருந்து பாதுகாத்தல், வெள்ள அபாயங்களை தணித்தல், கடல்நீர் உட்புகுவதை தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காலநிலை மாற்றத்துக்கான நிர்வாக குழுவின் 2-வது கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் பேசியதாவது:-
காலநிலை மாற்றம்தான் மனித சமுதாயம் எதிர்கொள்ள இருக்கும் மாபெரும் சவால். அதை எதிர்கொள்வதற்கான திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறோம். அந்த வகையில், பசுமை காலநிலை நிறுவனம், காலநிலை மாற்ற இயக்கம், ஈரநில இயக்கம், நெய்தல் மீட்சி இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் உள்ளது. இதுபோன்ற இயக்கங்கள், திட்டமிடுதல்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இந்த இயக்கங்களுக்கு கொள்கை வழிகாட்டவும், ஆலோசனைகள் வழங்கவும், காலநிலை மாற்றத்துக்கான நிர்வாக குழுவை உருவாக்கி, அதற்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அரசின் செயல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதுதான் இக்குழுவின் கடமை.
தமிழகத்துக்கு இயற்கை அரணாக விளங்கும் கடற்கரையை வலுப்படுத்த, நெய்தல் மீட்சி இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு அலையாத்தி காடுகள், கடல் புற்கள் மற்றும் கடல் வாழிடங்கள் உருவாக்குதல், மீட்டெடுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் நாட்டிலேயே 3-வது மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு காற்றாலை மூலம் ஆண்டுக்கு 11,900 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 50 சதவீத ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறப்பட வேண்டும் என்பது முக்கிய குறிக்கோள்.
தமிழகத்தின் காலநிலை திட்டத்தில் முக்கிய தூணாக விளங்குவது ஊரக நீர் பாதுகாப்பு. 2024-25-ம் ஆண்டில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை மூலம் ரூ.500 கோடி முதலீட்டில் 5,000 சிறிய நீர்ப்பாசன குளங்கள் அமைக்கப்பட உள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம், தமிழகத்தில் 2.40 லட்சம் இயற்கை வள மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், காவிரி கழிமுக பகுதியில், பருவநிலை மாறுதல் தழுவல் திட்டம், கடற்கரை மாவட்டங்களை புயல்களில் இருந்து பாதுகாத்தல், காலநிலை மாறுபாடுகளால் ஏற்படும் வெள்ள அபாயங்களை தணித்தல், பாசன வசதியை மேம்படுத்துதல், கடல்நீர் உட்புகுவதை தடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெண்ணாறு, பாமணியாறு, கோரையாறு, மனங்கொண்டனாறு, மரக்கா கோரையாறு, கடுவையாறு ஆகிய 6 ஆறுகள் மற்றும் 6 நீரேற்று நிலையங்களை மேம்படுத்த ரூ.1,825 கோடி மதிப்பில் முதல்நிலை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, கடனுதவி வேண்டி மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே, இயற்கையை பாதுகாப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதை காட்டுகிறது. இத்தகைய முன்னெடுப்புகளின் வெற்றிக்கு காரணமாக இருப்பது பொதுமக்களின் பங்கேற்புதான். ‘மீண்டும் மஞ்சப்பை’ போன்ற பிரச்சாரங்களால் துணிப்பை பயன்பாடு அதிகரித்துள்ளது.
வெப்ப உயர்வு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வெப்ப அலையை, மாநில பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 5-வது பெருநகரமாக சென்னை உள்ளது. காலநிலைக்கான செயல் திட்டத்தை தயாரிக்கும், C40 நகரங்களுக்கான கூட்டமைப்பில் சென்னை மாநகராட்சி இணைந்துள்ளது. அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையாக அரசு செயல்பட்டு வருகிறது.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. அதையும் கவனத்தில் கொண்டு திட்டங்களை தீட்ட வேண்டும். உலக அரங்கில் காலநிலை மீள்திறன் மற்றும் நீடித்த நிலைத்த வளர்ச்சியில் மற்ற மாநிலங்கள், நாடுகளுக்கு முன்னோடியாக தமிழகத்தை மாற்றிக் காட்டும் வகையிலான செயல் திட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.