ஜி-7 மாநாடு: உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

மோடியை தட்டி அழைத்து கையை குலுக்கி அன்பை காட்டினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார். மேலும், மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரும் பிரதமர் மோடியிடம் கைகுலுக்கி மகிழ்ந்தனர். இதையடுத்து, உலக தலைவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஜெர்மனியில் ஜூ7 நாடுகளின் உச்சி மாநாடு துவங்கியது. அதில், அந்நாட்டு அதிபரின் அழைப்பின் பேரில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றடைந்தார். அங்கு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். இதில் கனடா பிரதமர் ஸ்டின் ட்ரூடேவிடம் மோடி பேசிகொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன், மோடிபின் இடது தோள்பட்டையை லேசாக தட்டினார். சட்டென திரும்பி பார்த்த மோடி உடனே பைடனை அழைத்து கை குலுக்கி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா கலந்துகொண்டது. மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெற்ற ‘எதிா்காலத்துக்கான சிறந்த முதலீடு: பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம்’ என்ற தலைப்பிலான கூட்டத்தில் உரையாற்றிய பிரதமா் மோடி கூறியதாவது:-

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. சுற்றுச்சூழலைக் காப்பதற்கான இந்தியாவின் உறுதி, செயல்பாட்டிலேயே வெளிப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த எரிசக்தி பயன்பாட்டில் மரபுசாரா எரிசக்தியின் பங்கு 40 சதவீதம் இருக்க வேண்டுமென்ற இலக்கை இந்தியா 9 ஆண்டுகளுக்கு முன்பே எட்டியுள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் 10 சதவீதம் கலக்கப்பட வேண்டும் என்ற இலக்கை 5 மாதங்களுக்கு முன்பே எட்டியுள்ளது. முற்றிலும் சூரிய எரிசக்தி மூலமாக மட்டுமே இயங்கும் முதல் விமான நிலையம் இந்தியாவில் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து அமைப்பான ரயில்வே, நடப்பு தசாப்தத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தில் நிகர பூஜ்ய அளவை எட்டிவிடும்.

இந்தியா போன்ற பெரிய நாடுகள் சிறப்பாகச் செயல்படும்போது, மற்ற நாடுகளும் ஊக்கம்பெறும். இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஜி7 நாடுகள் உரிய ஆதரவு வழங்கும் என நம்புகிறேன். இந்தியா தற்போது மிகப் பெரிய பசுமை எரிசக்தி தொழில்நுட்பத்துக்கான சந்தையாக மாறியுள்ளது. ஆராய்ச்சி, புத்தாக்க நடவடிக்கைகள், தயாரிப்பு உள்ளிட்டவற்றில் ஜி7 நாடுகள் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதற்கான செயல்திட்டத்தை கடந்த ஆண்டு கிளாஸ்கோ மாநாட்டில் முன்மொழிந்தேன். அத்திட்டத்தைக் கடந்த சுற்றுச்சூழல் தினத்தின்போது இந்தியா நடைமுறைப்படுத்தியது. அனைத்து நாடுகளும் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கான நமது மிகப் பெரிய பங்களிப்பாக இத்திட்டம் இருக்கும். பழங்காலத்தில் இருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. அடிமைத்தளையில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடாக மாறிய பிறகு, தற்போது உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

சா்வதேச மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 17 சதவீதம் போ் வசிக்கின்றனா். ஆனால், சா்வதேச கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையை இந்தியா்கள் கடைப்பிடித்து வருவதே அதற்கு முக்கியக் காரணம். சா்வதேச சூழல் காரணமாக எரிபொருள்களின் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அதைக் கருத்தில்கொண்டு அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயுவை இந்தியா வழங்கியது. ஏழைகளுக்கு எரிசக்தி வசதியை ஏற்படுத்தித் தரும் அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவா்களுக்கு எல்இடி பல்புகள் வழங்கப்பட்டன. இவ்வாறு பிரதமா் மோடி பேசினார்.

சீனா நடைமுறைப்படுத்தி வரும் சாலை வழித்தடத் திட்டத்தை எதிா்கொள்ளும் வகையில் சுமாா் ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான ‘சா்வதேச கட்டமைப்பு முதலீட்டுக்கான கூட்டமைப்பு’ திட்டத்தை ஜி7 தலைவா்கள் நேற்று திங்கள்கிழமை அறிவித்தனா். இது தொடா்பாக அதிபா் பைடன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘முக்கியத்துவமிக்க கட்டமைப்புகளை மேம்படுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2027-ஆம் ஆண்டுக்குள் சுமாா் ரூ.45 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜி7 நாடுகள் முடிவெடுத்துள்ளன. இந்தத் தொகையானது நிதியுதவியாக நாடுகளுக்கு வழங்கப்படாது. இந்த முதலீடானது அனைத்துத் தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் அமையும். அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் மேம்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சீனாவின் திட்டத்தால் பல நாடுகள் கடனில் தவித்துவரும் நிலையில், அத்திட்டம் கடும் விமா்சனங்களை எதிா்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதலீட்டுத் திட்டத்தை ஜி7 கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜி7 மாநாட்டிலும் இதே திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அது தொடா்பாக கடந்த ஓராண்டில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்போது அத்திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மோடி, ஜெர்மனியில் இருந்து இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்திக்கிறார் பிரதமர் மோடி. முன்னாள் அதிபர் ஷேக் கலிஃபா பின் சையது அல் நஹ்யானின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்கிறார்.