உத்தரப் பிரதேசத்தில் பூலான் தேவியை கடத்தியவர் கைது!

பூலான் தேவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கும்பலில் ஒருவராக கருதப்படும் சேதா சிங்கை, உத்தரப் பிரதேச காவல் துறையினர் கைது செய்தனர்.

65 வயதான சேதா சிங், கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக ஹிந்து மக்களின் வழிபாட்டு தலமான சித்ரகூட் பகுதியில் உள்ள மடத்தில் சாமியாராக இருந்து வந்ததும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

1980ஆம் ஆண்டு பூலான் தேவியை கடத்திச் சென்ற ஆயுதமேந்திய கொள்ளை கும்பலில் ஒருவராக கருதப்பட்டு காவலர்களால் தேடப்பட்டு வந்த சேதா சிங், சித்ரகூட் பகுதியில் சாமியாராக இருந்து வந்துள்ளார். கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் வன்கொடுமை என 20 வழக்குகளுக்கும் மேல் சேதா சிங் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சேதா சிங் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.50,0000 சன்மானம் அறிவித்து காவல் துறையினர் அவரைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தின் பாஷவுன் பகுதியில் சேதா சிங்கை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். உடல் நிலை சரியில்லாததால் தனது சொந்த கிராமத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவலர்கள் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். சேதா சிங் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்த இடங்களில் வீடுவீடாக தேடுதல் பணிகளை மேற்கொண்டதன் விளைவாக காவல் துறையிடம் தற்போது சிக்கியுள்ளார். அவர் சித்ரகூட் பகுதியில் சாமியாராக இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், சேதா சிங்கிடமிருந்து வேறு பெயரில் போலி வாக்காளர் அட்டை, பான் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

சேதா சிங் 23 -24 வயதின்போது சாம்பல் பள்ளத்தாக்கில் பதுங்கியிருந்த ஆயுதமேந்திய கொள்ளையர்களான லால்ராம் கும்பலுடன் இணைந்துள்ளார். லால்ராம் கும்பலில் அதிக பணிகளை செய்தவராக சேதா சிங் அறியப்படுகிறார். லால்ராம் கும்பலின் தலைவர்களான லால்ராம் மற்றும் சீதாராம் சகோதரர்கள் இணைந்து, தங்களது எதிரி கும்பலான பிக்ரம் மல்லாவைக் கொன்றனர். அதனைத் தொடர்ந்து 1980 ஆகஸ்ட் மாதம், பிக்ரம் மல்லாவின் காதலியும், குழுவில் ஒருவருமான பூலான் தேவியை, லால்ராம் கும்பல் கடத்திச் சென்று அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ளனர்.

“நாங்கள் பழைய கோப்புகளை ஆராய்ந்தோம். எங்களிடமிருந்த தகவலின்படி, பூலான் தேவியை கடத்திய வழக்கில் லால்ராம் கும்பலின் முக்கியப்புள்ளியாக சேதா சிங் செயல்பட்டு வந்துள்ளார்” என சேதா சிங் கைது செய்யப்பட்ட கிராமத்திற்குட்பட்ட அயனா மாவட்ட காவல் நிலைய அதிகாரி ஜிதேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

பூலான் தேவி, பீமை கிராமத்தில் மூன்று வாரங்களாக அடைத்து வைத்து ஆதிக்க சமூகத்தினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் 1981 பிப்ரவரியில், வன்கொடுமையில் ஈடுபட்ட 20 பேரை பூலான் தேவி சுட்டுக் கொன்றார்.