வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்க வேண்டும்: ராமதாஸ்!

வாக்குக்கு காசு கொடுக்கக் கூடாது என்ற சட்டத்தையும் கொண்டு வர வேண்டும். வாக்குக்கு பணம் கொடுப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.

புதிய அரசியல் பதிப்பகம் சார்பில், பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய ‘போர்கள் ஓய்வதில்லை’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன், விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அன்புமணியின் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புத்தகத்தின் முதல் பிரதியை விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட, விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக் கொண்டார். விழாவில் ராமதாஸ் பேசியதாவது:-

அரசியல்வாதிகள் நிறைய படித்திருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முடிவெடுக்க முடியும். மக்களுக்கு சேவை செய்ய முடியும். அதிகாரிகளை தன்னுடன் வைத்திருக்கலாம். ஆனால், அதிகாரிகள் சொல்வதையெல்லாம் அரசியல்வாதிகள் செய்யக்கூடாது.

மக்களின் நலனுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால், சாதி என்ற குறுகிய வட்டத்துக்குள் என்னை அடைத்துவிட்டார்கள். நல்ல கல்வி, சுகாதாரம், விவசாயம் இவைதான் நமக்குத் தேவை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை கொண்டு வருவதைப்போல, வாக்குக்கு காசு கொடுக்கக் கூடாது என்ற சட்டத்தையும் கொண்டு வர வேண்டும். வாக்குக்கு பணம் கொடுப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும். நான் எப்போதும் மக்களுக்காகப் போராடிக் கொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

பாமக தலைவர் அன்புமணி பேசும்போது, “பாமக நிறுவனர் ராமதாஸ் 20 நூல்களை எழுதியுள்ளார். இந்தியாவிலேயே அவரைப் போல மது ஒழிப்புக்காக போராடியவர் யாரும் கிடையாது. நதிநீர் பிரச்சினைக்கு எங்களிடம் தீர்வுகள் உள்ளன. எங்களிடம் 6 மாதம் அதிகாரம் இருந்தால்போதும், தமிழகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவோம். தமிழகத்தில் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக சாதி தலைவர் என்று கூறி ராமதாஸை சிறுமைப்படுத்துகிறார்கள். அனைத்து சமுதாயத்திற்காகவும் போராடியவர் ராமதாஸ்.அப்படிப்பட்டவரை வேலை இல்லாதவர் என்று கூறி கொச்சைப்படுத்துகிறார்கள். இங்கிருப்பவர்கள் சமூக நீதியைப் பற்றி பேசுகிறார்களே தவிர, சமூக நீதியை நிலைநாட்டுவதில்லை” என்றார்.

விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசும்போது, “பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். ஏழை, நடுத்தர மக்களுக்கு உயர்கல்வி கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் இருக்க, ஆறுகளை இணைக்க வேண்டும். நீதிமன்றத்தில் தேக்கத்தில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்” என்றார்.