திருச்சியில் நாக்கை பிளந்து டாட்டூ போட்ட இருவர் கைது!

திருச்சியில் டாட்டூ கடை என்ற பெயரில் கண்களில் கலரிங் செய்வது, நாக்கை பிளந்து ஆபரேசன் செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மூன்று பேரின் நாக்கை சிதைத்துள்ளது, அந்தரங்க உறுப்புகளில் டாட்டூ குத்துவது என பலரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து வந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருச்சி, வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே “ஏலியன் டாட்டூ” என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்தார். உடலில் வித்தியாசமாக டாட்டூ வரைவது உள்ளிட்டவற்றை செய்து வந்த அவர் டிரெண்டிங்கிற்காக பாம்பு, ஓணான் உள்ளிட்ட விலங்குகளுக்கு இருப்பதுபோல் மனிதர்களுக்கும் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறையை செய்வதாக கூறி அதை அவர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி உள்ளார். மேலும், அவர் தன்னுடைய நாக்கை பிளவுப்படுத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். அதனை பார்த்த சிலர் அவரிடம் சென்று தங்களுடைய நாக்கை பிளவுபடுத்தி கொண்டனர். அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர போலீசார், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தபோது அவர் நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்தது தெரிய வந்தது. அதன்பேரில் ஹரிஹரனையும், அவர் கடையில் பணியாற்றிய ஜெயராமன் என்பவரையும் திருச்சி மாநகர கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட அவருடைய டாட்டூ கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் “சீல்” வைத்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இதற்கு முன்பாக மும்பையில் ஒரு டாட்டூ வரையும் இடத்தில் பணியாற்றியதாகவும், அங்கு இந்த செயல்முறையை கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் ஹரிகரன் திருச்சியில் பலரது நாக்கை பதம் பார்த்ததோடு லட்சக்கணக்கில் பணம் கறந்து வந்ததும் போலீசார் நடத்திய தெரிய வந்துள்ளது. சாதாரணமாக டாட்டூ போடுவதற்கு ஆயிரம் ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை வசூல் செய்துள்ளார் ஹரிஹரன். அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஊசிகள், கலர்களை கொண்டு டாட்டூ போடுவதற்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வசூலித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நாக்கை சிதைவு படுத்தி இரண்டாக பிளக்கும் சிகிச்சைக்கு 50,000 ரூபாய் வரை வசூலித்திருக்கிறார். மேலும் பலருக்கு நாக்கிலேயே டாட்டூ போட்டு 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பெண்கள், ஆண்கள் உள்ளிட்டோருக்கு அந்தரங்க உறுப்புகளில் டாட்டூ போடுவதற்கு பத்தாயிரம் ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறார். மேலும் தங்களது நண்பர்களை வரவழைத்து அவர்களுக்கு அந்தரங்க உறுப்புகளில் டாட்டூ போட்டு அதனை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்ததும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மாதத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை ஹரிகரன் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.