58 பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான தடை செய்யப்பட்ட அல் உம்மா பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பாட்ஷா நேற்று காலமானார். இதனையடுத்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தை அச்சுறுத்திய கொடூர குற்றவாளியை “தியாகி” ஆக்கும் அரசியல் ஆபத்தானது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கோவை கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த பாஷாவின் குற்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழகத்தை நிலைகுலைய வைத்ததை தமிழர்கள் ஒருபோதும் மறக்க முடியாது.
1983ஆம் ஆண்டு முதல் 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வரை நடந்த பல கொடூரச் செயல்களை செய்ததால் 26 ஆண்டுகள் சிறையில் இருந்தது பாஷா. நாம் தமிழர் கட்சியின் சீமான் விடுதலை, சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு இன்னும் சில கேவல அரசியல் நடத்துகின்ற சிலர் பாஷாவை தியாகியாக சித்தரிப்பது தமிழகத்திற்கு செய்யும் துரோகம் என்பதை அழுத்தம் திருத்தமாக இந்து முன்னணி பதிவு செய்ய விரும்புகிறது . கோவையில் பொதுக்கூட்டம் பேசி விட்டு வரும்போது பாஜக தலைவர்களான திருக்கோவிலூர் சுந்தரம், ஜனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வந்த வாகனத்தை இடைமறித்து தாக்கியவர்கள் இவர்கள்.
1984 ஜூலை 17ஆம் தேதி கோவையில் பொதுக்கூட்டம் பேசி விட்டு இரயிலில் மதுரை திரும்பிய இந்துமுன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம . கோபாலன் அவர்களை பின் தொடர்ந்து வந்து மதுரை இரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கையும் களவுமாக பிடிபட்டது இந்த பாஷா. இந்த குற்ற செயல்களை செய்த போதே சட்டம் தக்க தண்டனை கொடுத்திருந்தால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் உயிர் போய் இருக்காது.
சட்டத்தின் ஓட்டைகளும் சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலும் குற்றவாளிகளைத் தப்ப விட்டதால்தான் கடந்த 40 ஆண்டுகளாக தமிழகம் பல பயங்கரவாத செயல்களினால் அழிவுகளை சந்தித்தது. 1998 ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பாஜகவின் அகில இந்திய தலைவர் எல்.கே. அத்வானியை குறிவைத்து கோவை முழுவதும் 13 இடங்களில் 21 குண்டுகள் வைத்து மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்திய சதித்திட்டத்தின் தலைவன் பாஷா. இந்த குண்டு வெடிப்பில் 58 அப்பாவிகள்; பெண்கள், ஆண்கள் குழந்தைகள் என செத்து மடிந்தனர். குண்டு வைத்த இடங்கள் மருத்துவமனை, மார்க்கெட் என அனைத்தும் வெகுஜன மக்கள் வசிக்கின்ற மிக முக்கியமான இடங்கள். அப்பாவி மக்களை கொன்று குவித்த ஈவிரக்கமற்ற இந்த கொலை பாதகத்தை செய்தவர், கோயமுத்தூரை சீர்குலைத்தது தியாகியா? தொழில்துறை மையமாகிய கொங்கு மண்டலமே இதனால் பெரிய பொருளாதார இழப்பை சந்தித்தது.
தமிழனின் மறதியை அரசியல்வாதிகள் தங்கள் ஓட்டு வங்கி அரசியலுக்கு மூலதனமாக நினைக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை. ஜிகாத் கமிட்டி என்ற அமைப்பும் பின்னர் அல்உம்மா என்ற அமைப்பையும் ஏற்படுத்தி தமிழகத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத மதவெறி ஜிகாத் கொலைகள் நடக்க காரணம் பாஷா. சாதாரண மக்கள் மட்டுமல்ல ஆம்பூர், புழல் உள்பட பல இடங்களில் காவல்துறை அதிகாரிகள் மீது நடந்தது கொலைவெறி தாக்குதல் இவர் தூண்டுதலால் நடந்தது.
மதுரை ஜெயபிரகாஷ் கோவை செல்வராஜ் போன்ற பல காவல்துறை அதிகாரிகள் பட்டபகலில் கொல்லப்பட்டனர். நீதிபதிகளும் மிரட்டப்பட்டனர், பாதிக்கப்பட்டனர். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவு இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழகத்தில் தான் தலைவிரித்தாடுகிறது. இதற்கு காரணம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு துணை போகும் அரசியல்வாதிகள் தான். இவர்கள் மூளைச்சலவை மற்றும் பிற்போக்குதனத்தால் பல அப்பாவி இஸ்லாமிய குடும்பங்கள் இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்வும் சீரழிந்துள்ளது.
எனவே தியாகி யார்? துரோகி யார்? என்பதில் தமிழர்கள் தெளிவு பெற வேண்டும். குண்டு வைத்தும், கொடூரப் படுகொலைகள் செய்த மதவெறி கலவரக்காரர்கள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக, அதிமுக துடிப்பது எத்தகையது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் பொது அமைதியும் நீடித்து இருக்க வேண்டும் என்றால், அரசியல்வாதிகள் கொடூர குற்றவாளிகளுக்கு துணைபோகக் கூடாது. குற்றவாளிகள் தண்டிக்க நீதியும் சட்டமும் காவல்துறையும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.