தனது திருமணம் எப்போது என்பது பற்றியும் தனது பெற்றோர்கள் பிரிவு பற்றியும் ஸ்ருதி ஹாசன் மனம் திறந்து பல்வேறு விசயங்களைப் பேசி இருக்கிறார். அவர் தனக்கு திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.
பலருக்கும் ஸ்ருதி ஹாசன் என்றால் அவரது தந்தை கமல்ஹாசன்தான் ஞாபகம் வருவார். இப்போதும் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக கமல்ஹாசன் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவரை விட இளம் நடிகரான பலர் வாய்ப்பை இழந்து சினிமா வாழ்க்கையை விட்டே போய்விட்டனர். கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதிஹாசன் இந்தியில் இம்ரான்கானுடன் சேர்ந்து ‘லக்’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். அடுத்து தெலுங்கு சினிமா அவரை வரவேற்று ஏற்றுக் கொண்டது. மூன்றாவதாகத்தான் அவருக்கு தமிழில் ‘ஏழாம் அறிவு’ படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர் ஸ்ருதிஹாசன் பற்றியும் அவரது காதல் வாழ்க்கை பற்றியும் பல்வேறு கிசுகிசுக்கள் வெளியாகிவிட்டன. அவர் இப்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பிசியாக இல்லை. சுதந்திரமான இசைக் கலைஞராக வலம் வரவேண்டும் என்பதே ஸ்ருதியின் இளம் வயது கனவாக இருந்தது. அவர் நல்ல பாடகர். கூடவே முறையாக இசை படித்திருக்கிறார். அவரது தந்தையின் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திற்கு இசையமைத்தும் இருக்கிறார். தற்போதும் அவர் சுதந்திரமான இசைக் கலைஞராக வரவேண்டும் என்பதில் தீவிரமாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
இந்நிலையில்தான் அவர் அளித்துள்ள பேட்டியில் அவரது பெற்றோர் விவாகரத்து பற்றியும் தனது கல்யாணம் பற்றியும் மனம் திறந்து பேசி இருக்கிறார் ஸ்ருதி. அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-
கணக்கு எனக்குச் சரியாக வராது. எனவே 10 ஆம் வகுப்பே நான் பாஸ் ஆவேனா என்று வீட்டில் சந்தேகம் வந்துவிட்டது. எனக்கு மியூசிக் மேல் ஆசை இருந்தது. 5 வயதில் ‘அப்பாவும் நீயே அம்மாவும் நீயே’ பாடலைப் பாடிய ஞாபகம் இருக்கிறது. அப்பாவின் பாட்டைத்தான் நான் முதன்முதலாகப் பாடினேன். இதைச் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மேடையில் பாடினேன். 16 வயது வரை சென்னையில் வளர்ந்தேன். என் வயதில் அம்மா விவாகரத்து நடந்தது. எனவே அவருடன் பாம்பே போய்விட்டோம். 1990 வரை பாம்பே வாழ்க்கை. பின் மியூசிக் படிக்க அமெரிக்கா போய் விட்டேன்.
கமல்ஹாசனை விட்டு அவரது தாய் சரிகா பிரிந்த போது இவருக்கு இளம் வயது. அப்போது அவரது மனநிலை எப்படி இருந்தது? இந்தப் பிரிவு அவரை பாதித்ததா? எனப் பல கேள்விகள் இன்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதைப் பற்றிப் பேசும் போது ஸ்ருதிஹாசன், தனது பெற்றோர்கள் பிரிந்து நல்லதுதான் என்று கூறி இருக்கிறார். “வழக்கமாக நம் சமூகத்தில் பெற்றோர் ஒன்றாக காலம் முழுக்க சேர்ந்து வாழவேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு வந்த பிறகு சமூகத்திற்காகச் சேர்ந்து நடிப்பதில் அர்த்தம் இல்லை. அதைவிட்டு வெளியேறிவிடுவதே நல்லது” என்றும் அவர் பேசி இருக்கிறார்.
தொடர்ந்து அவரது கல்யாணம் எப்போது என்ற கேள்விக்கு அவர் அதில் பெரிய ஆர்வம் ஏற்படவே இல்லை என்றும் அதைப் பற்றிக் கேட்டாலே எனக்குப் பிடிப்பதில்லை என்று கூறியுள்ளார். ‘எனக்கு எப்போது கல்யாணம் எனக் கேட்பவர்கள் யாரும் என் மண்டப செலவை ஏற்கப் போவதில்லை. பத்திரிகை அச்சடிக்கும் பணத்தைப் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. பின் ஏன் அதைப் பற்றி வருத்தமாக விசாரிக்கிறார்கள்?’ என்றும் அவர் பேசி இருக்கிறார்.