விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது அவர் நடிகராகவும் கலக்கிவருகிறார். இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அவர் தனது சாட்டையடி பதிலை கொடுத்திருக்கிறார். அந்த பதில் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதனையடுத்து அவர் இசையமைத்த டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்களும் வரவேற்பையே பெற்றன. முக்கியமாக காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே க்ளாசிக் ஹிட்டடித்தன. நாக்க முக்கா பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனிக்கு விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட்டாகின. இதன் காரணமாக முன்னணி இசையமைப்பாளர் என்ற இடத்துக்கு நகர்ந்தார் அவர்.
தொடர்ந்து அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் ஹிட்டாகிக்கொண்டிருக்க ஹீரோவாகும் ஆசை அவருக்கு வந்தது. அதன்படி நான் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் அவர். அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. முக்கியமாக விஜய் ஆண்டனியின் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படிதான் இருந்தது. அடுத்ததாக அவர் நடித்த சலீம், பிச்சைக்காரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டடித்தன. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த எந்தப் படமும் பெரிதாக சோபிக்கவில்லை. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கவும் செய்தார். அதுவும் தோல்வியடைந்தது. அந்த சமயத்தில்தான் அவர் விபத்திலும் சிக்கினார். அவர் கடைசியாக நடித்த ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியில்தான் முடிந்தன.
இதற்கிடையே விஜய் ஆண்டனியின் இசை, நடிப்புக்கு மட்டுமின்றி அவரது பேச்சுக்கும் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். தனக்கு மனதில் பட்டதை பட்டென்று பேசக்கூடியவர் அவர். இந்நிலையில் அவரிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், ‘வசதி இருந்தால் செய்துகொள்ள வேண்டியதுதானே. ஒரே நாடு, ஒரே சாதி, ஒரே மதம் என்றும் முடிந்தால் செய்துகொள்ளலாம்” என்றார். அவரது இந்த பதில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.